பைக் திருட்டு என்ற சந்தேகத்தின் பேரில் வாலிபரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கும்பல்: ராஜஸ்தானில் பயங்கரம்

4 hours ago 3

பார்மர்: ராஜஸ்தானில் பைக் திருட்டு என்ற சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் பக்கர்புரா என்ற கிராமத்தை சேர்ந்த ஷ்ரவன் குமார் என்ற தலித் வாலிபர், திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பார்மர் மாவட்ட எஸ்.பி நரேந்திர சிங் மீனா கூறுகையில், ‘கடந்த சில வாரங்களுக்கு முன் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை ஷ்ரவன் குமார் திருடினார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மற்றொரு பைக்கை திருடியதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டினர். ஆனால் தான் பைக் ஏதும் திருடவில்லை என்று ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார்.

இருந்தும் அவரை சரமாரியாக தாக்கிய சிலர், ஒரு கட்டத்தில் அவரை ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு கொடுமையாக தாக்கியுள்ளனர். அவரை தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் மீது திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றார். வாலிபர் ஒருவரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய விவகாரம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பைக் திருட்டு என்ற சந்தேகத்தின் பேரில் வாலிபரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கும்பல்: ராஜஸ்தானில் பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article