சென்னை: மலேசியாவில் உள்ள நிறுவனத்திற்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10.60 கோடி பணம் பெற்று மோசடி செய்த பெண்ணை அவரது தாயுடன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், இதுபோன்று மும்பை தொழிலதிபரை ஏமாற்றி ரூ.75 லட்சம் பணம் பறித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மலேசிய நாட்டின் தொழிலதிபர் ஒருவர் புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில், சென்னை வளசரவாக்கத்தில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தமிழரசி மற்றும அவரது தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர், மலேசியாவில் உள்ள எங்கள் நிறுவனத்திற்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10.61 கோடி வரை 2 பெண்களும் அவர்களின் வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொண்டு சர்க்கரை ஏற்றுமதி செய்யலாமல், சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டதாக போலி ஆவணங்கள் அனுப்பி ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவகடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
அந்த புகாரின் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அருண், நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, வளசரவாக்கத்தில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தமிழரசி இதே போன்று மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.75 லட்சம் வரை ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வளசரவாக்கம் பிரகாசம் சாலையை சேர்ந்த தமிழரசி(42) அவரது தாய் கோவிந்தம்மாள்(62) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இருவரின் வீடுகளில் சோதனை செய்த போது, மோசடி மூலம் சம்பாதித்த ரூ.1 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் சர்க்கரை ஏற்றுமதி செய்ய தேவைப்படும் போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மலேசியாவில் உள்ள நிறுவனத்திற்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக ₹10.60 கோடி பெற்று ஏமாற்றிய பெண், தாயுடன் கைது appeared first on Dinakaran.