
சண்டிகார்,
பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதி மற்றும் விமான தளங்களை புகைப்படங்கள் எடுத்து அவற்றையும் மற்றும் சில முக்கிய தகவல்களையும் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு கசிய விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி டி.ஜி.பி. கவுரவ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமிர்தசரஸ் கிராமப்புற போலீசார் விசாரணை மேற்கொண்டு பலக் ஷேர் மஷி மற்றும் சுராஜ் மஷி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், அவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் உள்ள தொடர்பு பற்றி தெரிய வந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஹர்பிரீத் சிங் என்ற பிட்டு என்பவர் வழியே இந்த தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, அலுவலல் ரகசிய சட்டங்களின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை தீவிரமடைந்ததும், பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என டி.ஜி.பி. கவுரவ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், இதுபோன்ற உளவு தகவல்கள் கசிவு சம்பவங்களும் நடந்து வருகின்றன.