
குர்தாஸ்பூர்,
பஞ்சாபில் உளவு தகவல் அடிப்படையில், போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பஞ்சாபில் அமைந்த, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து 2 பாகிஸ்தானிய ஆளில்லா விமானங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் ஷாஹர் கலன் கிராமம் அருகே வயல்வெளி ஒன்றில் நேற்று காலை ஆளில்லா விமானம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் பைனி ராஜ்புடானா கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் மற்றொரு ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது. இதனை எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை உறுதி செய்துள்ளது.
எல்லை பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் அந்த 2 ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்க கூடும் என தெரிகிறது.
கடந்த ஏப்ரல் 24-ந்தேதி போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், ஹெராயின் வகை போதை பொருட்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.