
லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 4 அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் தகுதிச்சுற்றின் மூலம் தேர்வாகும். இந்த 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோதும். தொடர்ந்து நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இந்நிலையில், இந்த தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
அதன்படி, இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் (லண்டன்), ஓல்ட் டிராபோர்ட்(மான்செஸ்டர்), ஹெடிங்லி (லீட்ஸ்), எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்காம்), தி ஓவல் (லண்டன்), ஹாம்ப்ஷயர் பவுல் (தி ஏஜியாஸ் பவுல்) (சவுத்தாம்ப்டன்), பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்) என ஏழு இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் (லண்டன்) இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.