
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங், நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பராப்ஜீத் சிங் தான் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அமிர்தசரஸ் துணை கமிஷனர் சாக்ஷி சாவ்னி கூறியதாவது:-
பஞ்சாப் மாநிலத்தின் பங்கலி, பாதல்புரி, மராரி கலான், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்றிரவு எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து டாக்டர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.