பஞ்சமி நிலங்களை தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

4 hours ago 3

தென்காசி மாவட்டம் புளியரை பகவதிபுரத்தை சேர்ந்த கென்சி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் பகுதியில் ஏராளமான பஞ்சமி நிலங்கள் உள்ளன. அவை ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டியவை. ஆனால் இந்த நிலங்களை செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் என்னை போல வீடு, நிலம் இல்லாதவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த பலனும் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஏழைகளுக்கு பிரித்து வழங்கும்படி உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் மனுவை செங்கோட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் 8 வாரத்தில் பரிசீலித்து பஞ்சமி நிலங்களை தகுதி அடிப்படையில் உரிய நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Read Entire Article