புதுடெல்லி: “பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் 1,000 பேருக்கு 2 என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது” என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, ‘இந்தியாவில் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், பச்சிளம் குழந்தை மரணங்கள் எவ்வளவு? அதைத் தடுக்க, குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்தியாவில் 16 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்தவிதமான ஊட்டச்சத்தும் வழங்கப்படுவதில்லை என்பது உண்மைதானா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.