
தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன்படி கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து காலை முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் குடங்கள், பால்காவடிகள் ஆகியவற்றின் மூலம் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 11.30 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இதையடுத்து சுவாமி வீதி உலா வருகிறார்.
பங்குனி உத்திரம் என்பதால் திரளான பக்தர்கள் பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானை தரிசிக்க வருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.