பங்குனி உத்திரம் திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு

1 week ago 3

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை சடங்கு நடந்தது. திருவிழா நிறைவாக நேற்று பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்ப சாமி எழுந்தருள மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ ஆராட்டு ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் காலை 10.45 மணிக்கு பம்பை கணபதி கோவிலை வந்து சேர்ந்தது. தொடர்ந்து 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு களபம் சார்த்தி தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் தலைமையில் ஆராட்டு நடைபெற்றது.

ஆராட்டு சடங்குகளுக்கு பின்னர் புத்தாடை அணிவிக்கப்பட்ட அய்யப்ப சாமி பக்தர்களின் தரிசனத்திற்காக பம்பை கணபதி கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் அருள் பாலித்தார். பிற்பகல் 3 மணிக்கு சாமி ஊர்வலம் பம்பை கணபதி கோவிலில் இருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டது. இந்த ஊர்வலம் சன்னிதானம் வந்ததும் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். விஷு பண்டிகையையொட்டி 14-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் கனி காணல் சடங்கு நடைபெறும். அன்று பக்தர்களுக்கு விஷு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் மற்றும் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் வழங்குவார்கள். தொடர்ந்து சித்திரை மாத பூஜைக்கு பின்பு வருகிற 18-ந் தேதி நடை அடைக்கப்படும். விழாவையொட்டி சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 

Read Entire Article