பங்குனி உத்திரம்: திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

1 week ago 3

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை குழுவைச் சேர்ந்த பக்தர்கள் மயில்காவடிகள் எடுத்தும், பெண்கள் 250 பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில் இருந்து படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் பால்குட அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மூலவரை 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் ரமணி, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

Read Entire Article