
கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முதல் முறையாக இழந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோற்று பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது. இதில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணியால் தகுதி பெற முடியாமல் போனது.
டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் விரிவாக விவாதித்தது. இதன் எதிரொலியாக வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த தோல்விகளின் எதிரொலியாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது. 41 வயதான அபிஷேக் நாயர் 8 மாதத்திற்கு முன்புதான் கம்பீரின் பரிந்துரையின் பேரில் பயிற்சி குழுவில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே அவரது பதவி காலியாகியுள்ளது. இவர் இதற்கு முன் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் கம்பீருடன் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட அபிஷேக் நாயர் உடனடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணைந்துள்ளார். இதனை கொல்கத்தா நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.