பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி கோயிலில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று அறிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி (திமுக) பேசுகையில், ”இந்த மாதம் பங்குனி மாதமாகும். பங்குனி உத்திரத்தில் முருகனை தரிசிக்க பல லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தைப்பூசம் நாளன்று பழனி ஆண்டவர் கோயிலில் கட்டணமில்லா தரிசனத்தை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்தார்கள். அதுபோல இந்த பங்குனி உத்திரத்திற்கும் முருக பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசனத்தை தருவாரா” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ”பங்குனி மாதத்தில் சிவனும், முருகனும் மகிழ்ச்சியோடு எல்லையில்லா ஆனந்தத்தோடு அனைத்து பகுதிகளிலும் உற்சவம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அவரது கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களில் தரிசனம் செய்வதற்கு கட்டண முறை ரத்து செய்யப்படுகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்குனி உத்திரத்தில் பத்து நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாக்களில் ஏற்கனவே ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் என்று அன்னதான திட்டத்தை அறிவித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் வீதம் என்று 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் திருக்கோயில் சார்பில் வழங்க உத்தரவிட்டுள்ளார். எங்கெல்லாம் இறை பக்தியோடு வருகின்ற பக்தர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்று பசியையும் போக்குகின்ற அன்னதான பிரபுவாக முதல்வர் பழநி கோயிலிலும் அன்னதானம் வழங்குவதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்” என்றார்.
The post பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி கோயிலில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.