
பகவான் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஏகாதசி. அவ்வகையில் நாளை அபர ஏகாதசி நாள் ஆகும். அபரா ஏகாதசி என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் பக்தர்கள் தானிய உணவு எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்து வழிபாடு நடத்தி மறுநாள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.
ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. அவ்வகையில், அபர ஏகாதசியின் மகிமையை கூறுகிறது அம்பரீசன் எனும் மன்னனின் கதை.
அம்பரீசன் எனும் மன்னன் திருமாலின் தீவிர பக்தன். வருடம் முழுவதும் தவறாமல் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்து அருளைப் பெற்று வந்தான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதமிருந்து, அதை முடிக்கும் தறுவாயில் துர்வாச முனிவர் அங்கு வந்துவிட்டார். விரத வேளையிலும் துர்வாச முனிவரை ஓடிச்சென்று வரவேற்ற மன்னன், அவரை உணவருந்த அழைத்தான். முனிவரும் அம்பரீசனின் வேண்டுகோளை ஏற்று நதியில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், நீராடப்போன துர்வாச முனிவர் குறித்த நேரத்துக்குள் திரும்பி வரவில்லை.
அவருக்காக வெகுநேரம் காத்திருந்த மன்னன் தனது விரதத்தை நிறைவு செய்யும் நேரம் நெருங்கியதால் செய்வதறியாது தவித்தான். குறித்த நேரத்திற்குள் விரதத்தை முடித்து, உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரதபங்கம் ஏற்பட்டுவிடும். இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஏகாதசி விரதத்தின் பலனைப் பெறமுடியாமல் போய்விடும். இதனால், மன்னன் திருமாலை நினைத்தபடியே துளசி தீர்த்தத்தை அருந்தி தனது விரதத்தை நிறைவு செய்தார்.
இதைத் தனது ஞான சக்தியால் அறிந்த துர்வாசர், கடும் கோபம் கொண்டு தனது தலைமுடியைப் பிடுங்கி ஆயுதமாக்கி எறிந்தார். அது பூதமாக மாறி மன்னனைத் துரத்தத் தொடங்கியது. மன்னன் திருமாலின் பாதங்களைச் சரணடைந்தான். திருமால், தன் பக்தனைக் காக்க சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் துர்வாச முனிவர் ஏவிய பூதத்தை அழித்துவிட்டு துர்வாசரையும் விரட்டியது. வேறு வழியில்லாமல் திருமாலிடமே சரணடைந்தார் துர்வாசர்.
அப்போது திருமால், ``என் பக்தனுக்கே நான் அடிமை. என் பக்தன் உன்னை மன்னித்தால் நானும் உன்னை மன்னிக்கிறேன்' என்று சொல்லி அனுப்பி வைத்தார். துர்வாசரும் அம்பரீசனிடம் சென்று மன்னிப்பு கேட்டார். மன்னன் சக்கரத்தாழ்வாரிடம் வேண்டி அவரைக் காப்பாற்றினான். அன்றைய தினத்தில் அம்பரீசன் மேற்கொண்ட விரதம்தான் அபர ஏகாதசி விரதம். அந்த விரதம் அவனைக் காப்பாற்றியதுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. துர்வாச முனிவரும் அபர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, திருமாலின் பக்தனைத் தாக்குவதற்காக பூதத்தை ஏவிய தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார் என புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபர ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும், மங்காத பேரும், புகழும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஏகாதசி விரதம் குறித்து இஸ்கான் சார்பில் பக்தர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏகாதசியின்போதும் விரதம் மேற்கொள்ளும் நாள் மற்றும் விரதம் முடிக்கும் நேரம் குறித்து அந்தந்த பகுதி இஸ்கான் கோவில் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அவ்வகையில், தென்தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் நாளை (மே 23) ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மறுநாள் (மே 24) சனிக்கிழமை காலை 6.10 மணி முதல் 10.00 மணிக்குள் விரதம் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.