
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பணி நிரந்தரம் கோரி ஜனநாயக ரீதியில் போராடும் பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதா? – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தி.மு.க அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், இசை, உடற்கல்வி மற்றும் கணினி பாடங்களை பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் தி.மு.க அரசின் ஏதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்த பின்பும் அவற்றை நிறைவேற்ற மறுப்பதும், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதும் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.
தேர்தலுக்கு முன்பாக "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" எனும் தலைப்பில் பரப்புரை மேற்கொண்டு, அங்கு பெறப்படும் மனுக்களுக்கு நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்ற தற்போதைய முதல்-அமைச்சரின் பொய்யான வாக்குறுதியை நம்பி மனு அளித்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.