
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் "பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. இதே வாக்குறுதியை 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலின்போதும் அறிவித்து இருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு என மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடமிருந்து கூடுதல் வருமானத்தை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், தேர்தல் வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்பதை நிறைவேற்ற தி.மு.க. அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றிக் கொண்டு வருபவர்களை நிரந்தரம் செய்வது என்பது மிகவும் நியாயமான கோரிக்கை என்பதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
பணி நிரந்தரம் கோரிக்கையினை வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதனை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டபோது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டனர். இதனையடுத்து, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என பகுதி நேர ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. தங்களுக்கான பணி நிரந்தர அறிவிப்பினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிட வேண்டுமென்று பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமே இதில் அடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் இதற்கான அறிவிப்பினை முதல்-அமைச்சர் வெளியிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.