சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியின் படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய செங்கோட்டையன்(அதிமுக), திமுக ஆட்சியமைந்த பின்பு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருவதாகவும், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதோடு 2 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார்’’ என்றார்.
The post பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்: முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.