இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

2 hours ago 3

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (24.04.2025) வினா – விடை நேரத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் அவர்கள்: பேரவைத் தலைவர் அவர்களே, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி சின்னம்பேடு, சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறப்பு திட்டம் ஏதாவது செயல்படுத்தப்படுமா?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, சிறுவாபுரி முருகன் திருக்கோயிலானது பல்வேறு வகையில் பக்தர்களுடைய நேர்த்திக்கடனுக்கு பரிகாரம் காணுகின்ற ஒரு ஸ்தலமாக விளங்குகின்றது. இத்திருக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் குறைந்தபட்சம் 50,000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்களும், மற்ற நாட்களில் 1000-த்திலிருந்து 2000 பேர்கள் பக்தர்கள் அந்த திருக்கோவிலுக்கு வருகின்றனர்.

ஆகவே இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்றிருந்தன. தற்போது ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருக்கோயில் திருக்குளம் ரூ.3 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்களுக்காக ரூ.38 லட்சம் செலவில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரூ.22.90 லட்சம் செலவில் அர்ச்சகர் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் சிறுவாபுரி திருக்கோயிலுக்கு மாற்று வழி பாதை அமைத்திட வேண்டும் என அந்த மாவட்ட அமைச்சர் நாசர் அவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜ், துரை சந்திரசேகர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று நானும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்களும் நேரடியாக ஆய்வு செய்து முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் அதற்கு ரூ.67 கோடியை அரசு நிதியாக வழங்கி அந்த சாலையை விரிவாக்குவதற்கும் தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார்.

அந்த திருக்கோயிலில் இந்த ஆண்டு இலவச மருத்துவ மையத்தையும் கொண்டு வந்திருக்கின்றோம். ஆகவே இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை குறிப்போடு இந்தியாவிற்கே ஆன்மிக அரசியலின் முன்னோடியாக இருக்கின்ற தமிழக அரசை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெகுவாக பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

அதேபோல சிறுவாபுரி திருக்கோயில் நடைபெறுகின்ற பணிகளையும் சேர்த்து எப்போது இந்த பணிகள் முடிவு வரும் என்பதையும், அதே திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறார்கள். அவர்களுக்கும் அடிப்படை வசதிகள் தாங்கள் செய்வதற்குரிய திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்பதை கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு திருத்தணி அருள்மிகு முருகன் திருக்கோயிலுக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை சொல்வதென்றால் இந்த நாள் முழுவதும் போதாது என்பதால் ஒரு சில திட்டங்களை மட்டும் பேரவையின் முன்வைக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.

திருத்தணி அருள்மிகு முருகன் திருக்கோயிலின் தங்கத்தேர் 2014 ஆம் ஆண்டு வரை பிறகும் வெள்ளித்தேர் 2017க்கு பிறகும் பக்தர்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த இரண்டு தேர்களையும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றோம். அதேபோல் தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருத்தணிக்கு மாற்று வழி அமைப்பதற்காக அரசிடம் வைத்த கோரிக்கை ஏற்று தமிழக முதல்வர் அவர்கள் இந்த நிதியாண்டில் ரூ.57.50 கோடியை அரசு மானியமாக வழங்கி அந்த மாற்றுப் பாதையை அமைப்பதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

அதோடு மட்டுமில்லாமல் அங்கு தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, அன்னதானக்கூடம் என ரூ.183.53 கோடி செலவில் பெருந்திட்ட வரைவினை அந்த திருக்கோயிலில் செயல்படுத்தி வருகிறோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் அந்த திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம், கட்டணமில்லாத மருத்துவ மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் நலன் கருதி, ரயில்வே நிலையத்திலிருந்து மலைக் கோயிலுக்கு இலவசமாக 2 பேருந்துகளை விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இயக்கி வருகிறோம். பக்தர்களுடைய கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வரும் காலங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, தமிழ் கடவுள் என்று சொல்லப்படுகின்ற சாதி மறுப்பு திருமணத்தை அன்று அறிவித்து நமக்கு எல்லாம் விட்டுச்சென்ற முருகனின் அறுபடை வீடு திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை போல அறுபடை வீடு இல்லாத பிற முருகன் திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறதா, அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் இதுவரை எவ்வளவு பக்தர்கள் பயன் பெற்றனர் என்பதை விவரத்தை அமைச்சர் அவர்கள் தெரிவிப்பார்களா என்பதை தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்: பேரவை தலைவர் அவர்களே, திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 60 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குள்ள 2000 மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் அரசு மானியத்தில் இதுவரை அறுபடைவீடு ஆன்மிகப் பயணத்தை முடித்துள்ளார்கள். இந்த ஆண்டு மானிய கோரிக்கையில், மேலும் 2000 பக்தர்களை ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் அனுமதி அளித்துள்ளதோடு அதற்கும் சேர்த்து அரசு நிதியை மானியமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி இருக்கின்றார்கள்.

இந்த திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு 110 முருகன் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. அறுபடைவீடு அல்லாத 143 முருகன் கோயில்களில் ரூ. 284 கோடி மதிப்பீட்டில், 609 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1085.63 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் அறுபடை வீடுகள் என்று சொல்லப்படுகின்ற திருச்செந்தூரில் 350 கோடி ரூபாய் செலவிலும், பழனியில் 180 கோடி ரூபாய் செலவிலும், திருப்பரங்குன்றத்தில் ரூ.2.60 கோடி செலவிலும், சுவாமிமலையில் ரூ.3.55 கோடி செலவில் மின்தூக்கி அமைக்கும் பணியும் நம்முடைய பழமுதிர்சோலையில் ரூ.9.10 கோடி செலவில் மலைப்பாதை சீரமைப்பு போன்ற பணிகளும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் நடைபெற்று வருகின்றன.

தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதோடு நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் சுமார் 5 லட்சம் முருக பக்தர்கள் பங்கேற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இந்த திராவிட மாடல் ஆட்சிதான் நடத்தியது என்பதை பதிவு செய்து, முருகன் திருக்கோயில்களுக்கு செய்கின்ற திருப்பணிகள் தொடரும் தொடரும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.

Read Entire Article