லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் காசியாபாத், கெய்ர், புல்பூர், மஜவான், குண்டர்கி மற்றும் கதேஹரி ஆகிய 6 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஆர்.எல்.டி. கட்சி மீராபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார். மேலும் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் போலி வாக்குப்பதிவை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வரை, பகுஜன் சமாஜ் கட்சி எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடாது என்று அவர் அறிவித்தார். அதே சமயம், மக்களவை, மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து போட்டியிடும் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.