சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்திற்கு முன் ஆஸி.கேப்டன் கூறியது என்ன..?

4 hours ago 1

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் அளித்த பேட்டியில்,

"துபாயில் மட்டும் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா? என்பது எனக்கு தெரியவில்லை. அனைத்து போட்டிகளையும் அவர்கள் இங்கே விளையாடியதால் பிட்ச் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். இந்தியா தங்களது அனைத்து போட்டிகளையும் நன்றாக விளையாடியது. எனவே இந்த நல்ல ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளோம். நாங்கள் பிட்ச்சை நன்றாக கணித்துள்ளோம்.

ஆனால் எங்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் உட்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வருண் சக்கரவர்த்தி மட்டுமல்ல இந்தியாவின் மற்ற ஸ்பின்னர்களும் தரம் நிறைந்தவர்கள் என்று நினைக்கிறேன். எங்களை பொறுத்த வரை ஸ்பின்னர்களை மிடில் ஓவர்களில் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி தோல்வி இருக்கும். இது நல்ல சவாலாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் சுழல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் அதை அடித்து நொறுக்க திட்டங்களை வகுக்க வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article