
சென்னை,
வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகயைில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 15 செ.மீட்டர் கனமழை பதிவாகி உள்ளது. தென்காசி மாவட்டம் கடனா அணையில் 13 செ.மீட்டர், கன்னியாகுமரி மாவட்டம் ஊத்து பகுதியில் 11 செ.மீட்டர், நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 10 செ.மீட்டர் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு, பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் சதம் கண்டது. அந்த மாவட்டத்தில் 101.84 டிகிரி வெப்பம் சுட்டெரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி வரை அதிகம் இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.