நமது மண்ணில் கோடிக்கணக்கான வகைகளில் நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றில் பல வகை நுண்ணுயிரிகள் பயிர்களைக் காக்கும் அற்புத பணிகளில் ஈடுபடுகின்றன. அதாவது நோய்களைப் பரப்பும் உயிரிகள் மீது தாக்குதல் நடத்தி பயிர்கள் செழித்து வளர துணைபுரிகின்றன. அத்தகைய நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தினால் ரசாயனங்களின் தேவை இல்லாமல் இயற்கையான முறையில் பயிர்ப் பாதுகாப்பினை மேற்கொள்ளலாம். எந்தெந்த நுண்ணுயிரிகள் என்னென்ன வகைகளில் செயல்படுகின்றன என்பதை அறிவோமா!
டிரைக்கோடெர்மா விரிடி
இது மண்ணில் உருவாகும் பயிர் நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிப் பூசனம் ஆகும். இந்தப் பூசனத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். விதை நேர்த்தி செய்யப்பட்டவுடன், பயிர் வளரும்போது வேரைச் சுற்றி கவசமாக இருந்து பயிர்களை வேர்களைத் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மண்ணில் உருவாகும் இந்தப் பூசனம் குப்பைகளை உரமாக்கும் தன்மை உடையது. விரிடியுடன் விதைகளைக் கலந்து விதைக்கலாம். நாற்றில் நனைத்து நடலாம். தெளிக்கலாம். வேர் அழுகல் நோய், நாற்று அழுகல், மஞ்சள் கிழங்கு அழுகல் நோய்களில் இருந்து இது பயிர்களைக் காக்கிறது.
சூடோமோனாஸ்: இது ஒரு பாக்டீரியா வகை நுண்ணுயிரி. பயிருக்கு பாதுகாப்பு அளித்து நோய்களைக் கட்டுப்படுத்த வல்லவை. மிக முக்கியமாக வேரழுகல், தண்டு அழுகல், இலைக்கருகல் நோய்களைக் கட்டுப்படுத்த வல்லவை. இதுதவிர ஹார்மோன், ஆக்ஸின், ஜிப்ரலின் போன்ற பல பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயிருக்கு அளிக்கவல்லவை. இவற்றை விதைநேர்த்தி, கரணை நேர்த்தி செய்யலாம். பயிரின் மீதும் தெளிக்கலாம்.
பச்சைப்பூசனம்
இது திரவ வடிவில் கிடைக்கிறது. இதனைக் கரைத்து எருக்குழிகளில் ஊற்ற வேண்டும். பூசனமானது வண்டுகளின் தோல் மீது படர்ந்து, உள்ளே ஊடுருவி கொல்லும் திறன் படைத்தது. காண்டமிருக வண்டு, வைர முதுகுப்பூச்சி, தண்டுத்துளைப்பான், கருவண்டு ஆகிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லவை.
பவேரியா பேசியானா
பவேரியா பேசியானா பூச்சிகளுக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி ஆகும். அனைத்து வகை பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். கரும்பில் தண்டு துளைப்பான், வாழைத்தண்டு கூன்வண்டு, நெல் புகையான், பச்சை தத்துப்பூச்சி, தக்காளி பழத்துளைப்பான், தென்னை காண்டாமிருக வண்டு, காய்கறிகளில் இலை தின்னும் புழு ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம். எந்த பின்விளைவினையும் ஏற்படுத்தாது.
வெர்ட்டிசீலியம் லக்கானி
இது பூச்சிகளைக் கொல்லும் பூசனக் பூச்சிக்கொல்லியாகும். முக்கியமாக சாறு ஊறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, ஆனைக்கொம்பன், செதில் பூச்சி, சிலந்தி, செம்பேன், தேயிலைக்கொசு ஈ ஆகியவற்றிற்கு எதிராக திறம்பட செயல்பட்டு பயிர்களைப் பாதுகாக்கிறது.
மெத்திலோபாக்டீரியம்
பாக்டீரியாக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு வகை உயிர் அல்லது அழுகும் பொருட்களைச் சார்ந்து வாழும். ஆனால் சில பாக்டீரியாக்கள் தாவரங்கள் மீது மிக முக்கியமாக இலைகளின் மீது வாழ்ந்து அவற்றில் இருந்து வெளிவரும் மூலக்கூறுகளை உணவாகக் கொள்ளும். இவை இலைகளின் மேல்பரப்பில் உள்ள இலைத்துளைகளை மூடித் திறக்கும் வல்லமை கொண்டவை. மெத்திலோ பாக்டீரியமானது காற்றில் வளரும் தன்மை கொண்டது. இலைகளில் சைட்டோகினின், இண்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற தாவர ஹார்மோன்கள் ஒருங்கிணைக்கும். விதை முளைப்பு மற்றும் நாற்று வளர்ச்சியை வேகப்படுத்தவும் தாவர வளர்ச்சியை துரிதப்படுத்தவும், வறட்சியைத் தாங்கி மகசூலை அதிகரித்துக் கொடுக்கவும் இது செயலாற்றுகிறது. பூத்தல், காய்கள் உருவாகி முதிர்ச்சியடைதல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. பழத்தின் தரம், நிறம் மற்றும் விதை எடையை இந்த பாக்டீரியா மேம்படுத்துகிறது. இந்த பாக்டீாியாவை விதை நேர்த்தியாக 1 சதவீதக் கரைசலில் 10 நிமிடங்களில் ஊற வைக்கலாம். மேலும் 1 சதவீதக் கரைசலை பயிர்களின் மீது தெளித்தால் பயிர் வறட்சியை 10 நாட்களுக்கு கூடுதலாக தாங்கும்.
– வி.குணசேகரன்.
The post நோய்களைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள்! appeared first on Dinakaran.