நன்றி குங்குமம் டாக்டர்
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம்.பிரபு
உடல் பருமன் ஏன் உருவாகிறது?
வரலாற்றில் இருந்து மனிதர்கள் தங்களின் உடலை கட்டுக் கோப்பாக வைக்கும் முறை என்பது அவர்களின் வாழ்வியல் முறையிலேயே இருந்தது. அதாவது உணவிற்காக வேட்டையாட விலங்குகள் பின் ஓடுவது, அதன்பின் மரமேறுவது என்று உடல் உழைப்புடன் சாப்பிடும் முறைதான் இருந்தது. அதிலும் உணவுப் பழக்கங்கள் என்றாலே, அசைவ உணவு வகைகளான விலங்குகளை அடித்துச் சாப்பிடுவதும், மரத்திலிருந்து பழங்களை பறித்துச் சாப்பிடுவதுமாக இருந்தது.
அதன்பின், நாகரீக வளர்ச்சியில் நெருப்பினால் சமைத்து சாப்பிடுவதும், விவசாயத்தால் ஓரிடத்தில் தங்கி உழைத்துச் சாப்பிடும் முறையும் அறிமுகமானது. அதில் தான் அரிசியும், கோதுமையும், நம் சீதோஷ்ண சூழலுக்கு ஏற்ப பயிரிட்ட காய்கறிகளைச் சாப்பிட்டதால், உடல் பருமன் என்ற வார்த்தை மிகவும் குறைவாக மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இன்றைக்கு உடல் பருமன் என்ற வார்த்தை அப்படியே தலைகீழாக நம் மக்களின் வாழ்வியலில் இருக்கிறது.
நம் தொழில்நுட்ப வளர்ச்சியினால் 2000க்கு பின் முதலாளித்துவ வளர்ச்சியாலும் நம் இந்திய மக்களின் வாழ்வியல் முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால் குண்டாக இருப்பது என்பது இன்றைக்கு ஆரோக்கியமற்ற விஷயமாகத் தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
உடல் பருமன் என்பது என்ன?
உடல் பருமன் என்பது இரண்டு வகையாக இருக்கிறது. முதலில் சென்ட்ரல் ஒபிசிட்டி என்பது வயிற்றுப் பகுதி மட்டும் அதிகரிக்கும். மற்றொன்று ஜெனரல் ஒபிசிட்டி என்பது உடல் மொத்தமும் அதிகரிப்பதாகும். இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், இதில் வயிற்றுப் பகுதி மட்டும் அதிகரிப்பது அதிக பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு பாடி மாஸ் இன்டக்ஸ் இல் (Body Mass Index) அவரது உயரத்திற்கு ஏற்ற எடை சரியாக இருக்கிறதா என்பதை அறியவேண்டும். அதாவது, பாடி மாஸ் இன்டக்ஸ் இல் 25 இன்ச் குறைவாக இருந்தால் நார்மலாக இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே, 25 இன்ச்லிருந்து 30 இன்சுக்குள் இருந்தால் அதிகப்படியான எடையில் இருக்கிறீங்க என்று அர்த்தம்.
அதிலும் 30 இன்சுக்கு மேல் இருந்தால் உடல் பருமனில் இருப்பதாக அர்த்தம். 25 இன்சுக்கு மேல் இருப்பவர்களை அதிகப்படியான எடை என்று கூறினாலும், அவர்களும் உடல் பருமனில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கவுண்ட் எல்லாமே ஜெனரல் ஒபிசிட்டியில் இருப்பவர்களின் வகையாக இருக்கிறது. மேலும், இதில் அவர்கள் சென்ட்ரல் ஒபிசிட்டியிலும் இருக்கிறார்களா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதாவது, இடுப்பின் அளவை வைத்துக் குறிப்பதாகும்.
ஆண்களுக்கு 37 இன்சுக்கு கீழ் இருக்கும் இடுப்பின் அளவு நார்மலானது என்றும் 37 இன்ச்லிருந்து 40 இன்ச் வரை இருந்தால் அவர்களுக்கு சென்ட்ரல் ஒபிசிட்டி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், அதுவே 40 இன்ச் என்றால், சென்ட்ரல் ஒபிசிட்டி இருப்பதாக அர்த்தமாகிறது. பெண்களுக்கு 31 இன்ச்க்கு கீழ் இருக்கும் இடுப்பின் அளவு நார்மலானது என்றும், 31 இன்ச்லிருந்து 35 இன்ச் வரை இருப்பது அவர்களுக்கு சென்ட்ரல் ஒபிசிட்டி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், 35 இன்ச் அதிகமாக இருக்கிறது என்றால், சென்ட்ரல் ஒபிசிட்டி இருக்கிறது என்பதான அர்த்தமாகும்.
இதில், சிலருக்கு பாடி மாஸ் இன்டக்ஸ் சரியாக இருந்தும், இடுப்பு பகுதி மட்டும் அதிகமாக இருக்கும். அவர்களைத் தான், சென்ட்ரல் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறோம். உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்?
நம்முடைய முன்னோர்கள் பஞ்சத்தாலும், உணவுப் பற்றாக்குறையினாலும் அவதிப்பட்டவர்கள் என்பது நாம் அறிந்தது. அதிலிருந்து நாம் மீண்டு, இன்றைக்கு அதிகப்படியான உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறோம் என்பது தான் வருத்தமானது. 2015ல் வெளியான ஜீரோ சைஸ் படத்தில் அனுஷ்கா வெயிட் குறைப்பதற்காக, ஹீரோ ஆர்யா அவரது உடலின் ஆரோக்கியத்திற்கு சொல்லும் விஷயங்கள் பல இருந்தாலும், அதில் குறிப்பிடத்தக்கது சமோசா, பாக்கெட்டில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள் இவற்றை எல்லாம் சாப்பிடாதீங்க என்று அனுஷ்காவிற்கு அட்வைஸ் செய்வார். உடனே அனுஷ்காவிற்கு கோபம் வரும்.
இம்மாதிரி நம் வீட்டில் நாம் பேசினாலும் அனுஷ்காவிற்கு வந்த கோபத்தை விட, நம் வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் சில பெரியவர்கள் வரை அவர்களுக்குப் பிடித்த உணவைச் சாப்பிடாதீங்க என்று சொல்லி விட்டால் போதும், எரிமலை ஒவ்வொரு வீட்டிலும் வெடிப்பதை நாம் பார்க்கமுடியும்.
ஏனென்றால், ஒருவர் சாப்பிடுவதை நாம் நம் கலாச்சாரத்தில் கணக்குப் பார்க்காமல், சாப்பிடவேண்டும் என்று நம் முன்னோர்கள் டிக்சனரியில் இருக்கிறது. அவர்கள் சொன்ன காலம் வேறு, தற்போதைய காலம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் குழந்தைகள் முதல் கொண்டு உடல் பருமனால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது மருத்துவத்துறை.
அதாவது உடல் பருமன் வரும் போதே, சுகர், பிரஷர் மற்றும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அழைத்துக் கொண்டே வருகிறது. இந்த மூன்று காரணங்களால் இதயப் பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், Obstructive Sleep Apnea என்பது தூக்கத்தில் வருகின்ற மூச்சுக்குழாய் அடைப்பு என்பதாகும். இதனால் ஆஸ்துமா, இருதய பாதிப்பு, குறட்டை போன்றவற்றால் அவதிப்பட நேரிடும். குறட்டை என்று எளிதாக நாம் கடக்க முடியாது.
அதிக எடையில் இருப்பவர்கள் மூச்சுக் காற்றை உள்ளிளுப்பது குறைவதால், அவர்களின் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் லெவலும் குறைந்து விடும். அதனால் இரவில் தூக்கம் குறைந்து, பகலில் தூங்கிக் கொண்டே இருப்பது போலிருக்கும். ஆக்சிஜன் லெவல் உடலில் குறையும் போது, மூளையின் செயல்பாடு குறைவது மட்டுமில்லாமல், உடலில் மற்ற ஆர்கன்களின் செயல்பாடும் குறைகின்றது.
மேலும், Intra Cranial Hypertension வர வாய்ப்பிருக்கின்றது. ஸ்ட்ரோக் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் Fatty liver மற்றும் பித்தப்பை கல் ஏற்படும். வயிற்றின் பகுதி எடை அதிகரிப்பதால், Stress Incontinence என்று சொல்லக் கூடிய சிறுநீர் பிரச்னை ஏற்படும். அதாவது சிறுநீர் போக வேண்டுமென்று தோணியதும், அடக்க முடியாமல், உடனே நிற்கின்ற இடத்திலேயே இருந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.
முக்கியமாக, உடலின் எடையை எலும்பு தான் முழுவதும் தாங்கிக் கொண்டிருப்பதால், Osteoporosis என்று சொல்லக்கூடிய எலும்புத் தேய்மானம் சீக்கிரமாக வந்து விடும். மேலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் உயிரைப் பறிக்கும் நோய்கள் வர வாய்ப்புகள் இருக்கின்றது. உடல் பருமனால் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்பட்டு வெரிக்கோசிஸ் ஏற்படும். அதாவது, உடல் பருமன் தானே என்று எளிதாக கடந்து செல்ல முடியாத அளவிற்கு தலை முதல் கால் வரை அனைத்துப் பாகங்களிலும் நோய்களை பாரபட்சமில்லாமல் வழங்கி வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
உடல் பருமன் ஏற்பட காரணங்கள்?
முதலில் நாம் சாப்பிடும் உணவுகளால் தான் உடல் பருமன் ஏற்படுகிறது. எதைச் சாப்பிடுவது என்பதை விட, எதைச் சாப்பிடக் கூடாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் குறைவாக தான் சாப்பிடுகிறோம், ஆனாலும் எடை அதிகமாகியிருக்கிறது என்பார்கள். அதாவது, மிக முக்கியமாக கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பதை மறந்து விடுவார்கள். மேலே அனுஷ்கா சமோசா, ஜங்க் உணவுகளை சாப்பிடுவதை விடுவது போல், நாமும் பொரித்த உணவுகள், கேக், பெப்சி, கோக் போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஜங்க் உணவுகள் குறைவாக சாப்பிட்டாலும், அதில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், உடல் பருமன் ஏற்படுகிறது.
நம் நாட்டின் சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு இருக்கும், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பழங்கள், காய்கள் எனச் சாப்பிட வேண்டும். அதாவது தீட்டப்பட்ட அரிசிகளை தவிர்த்து, முழு தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள் என்று சொல்லக்கூடிய தினை, கம்பு, கேழ்வரகு மற்றும் நார்மல் அரிசி சார்ந்த உணவுகள், கோதுமை சார்ந்த உணவுகள் சாப்பிடலாம். சிலர் சாப்பாட்டில் டயட் கடைபிடிக்கிறோம் என்பார்கள். அதாவது டயட் என்பது, 25% அரிசி வகைகள், 25% ப்ரோட்டீன் என்று சொல்லக் கூடிய முட்டை, மீன் இருக்கலாம், 35% காய்கறிகள், 15% பழங்கள் என்ற அளவில் டயட் கடைபிடிக்க வேண்டும்.
அடுத்தபடியாக உடற்பயிற்சி மிக முக்கியம். இன்றைய வாழ்வியலில் உடல் உழைப்பு குறைவாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றாற் போல் தினம் நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற உடற்பயிற்சிகளை கார்டியோ உடற்பயிற்சி என்று கூறுவோம். இவற்றை முறையாக செய்தாலே போதுமானது. அதாவது, உலக சுகாதார அமைப்பு கூறுவதாவது, தினம் 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம் என்றும், அதாவது வாரத்திற்கு குறைந்தது 150 மணி நேரம் முதல் 300 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறது.
மேலும் சிலருக்கு மரபணு ரீதியாக உடல் பருமன் இருக்கலாம். அவர்களும் கூட உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைக்க வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நாம் பலவித ஆக்சிடென்ட் எல்லாம் கேள்விப்படுகிறோம். ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு பிரச்னைகளால் மாவுக்கட்டு போட்டிருப்பதாலும், வீட்டில் இருக்கும் போது உடலை சரி செய்வதற்கு நன்றாக சாப்பிட நேரிடும். அதனால் அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்யமுடியாது. அதனாலும் உடை எடை அதிகரிக்கும். சில நேரங்களில் சில நோய்களுக்கு ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் வேறு மாத்திரைகள் எடுக்கும்போதும் உடல் பருமன் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அந்நேரத்தில் மருத்துவர்களின் உதவியோடு உடல் எடையைச் சரிசெய்ய முயற்சிக்கவேண்டும்.சிலருக்கு மனநல பிரச்னைகளாலும் மற்றும் அதிக கவலைப்படும் அல்லது கோபப்படும் நேரத்தில் அதிகமாக சாப்பிவார்கள். மேலும் சிலரோ, உணவைப் பார்த்தாலோ அல்லது உணவைப் பற்றி நினைத்தாலோ உடனே சாப்பிட்டு விடுவார்கள். இவர்களுக்கு பிகேவியர் தெரபி எடுக்கவேண்டும்.
இவையெல்லாம் செய்தும் உடல் எடை குறையாகவில்லை என்றால், மருத்துவரின் ஆலோசனையுடன் உடல் எடைக்குறைப்பிற்கு மருந்து மாத்திரைகள் உட்கொள்வது மற்றும் சர்ஜரி செய்வதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ளலாம்.உடல் பருமனும் ஒரு வகையான உடலை பாதிக்கும் நோய் என்றும், அதற்கான பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதும் இன்றைய முக்கிய விழிப்புணர்வாக இருக்கிறது.
The post நோய் நாடி-நோய் முதல் நாடி appeared first on Dinakaran.