ஊட்டி : ஊட்டி சிறந்த மலைவாசஸ் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான சீதோஷன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புாிகின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரிக்கும்.
இந்நிலையில் ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று ஊட்டிக்கு வருகை புரிகின்றனர். இ-பாஸ் நடைமுறை காரணமாக வழக்கமான கூட்டத்தை விட தற்போது குறைவாகவே வருகின்றனர். ஊட்டி – கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதி உள்ளது.
வனங்களுக்கு நடுவே உள்ள இந்த பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இதனால் இந்த பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இதனால் அப்பகுதி களை கட்டியுள்ளது. இதேபோல சூட்டிங் மட்டம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.
அங்கு குதிரை சவாாி செய்து மகிழ்கின்றனா். இதனிடையே சூட்டிங் மட்டத்திற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டி – கூடலூர் சாலையோரத்தில் நோ-பார்க்கிங் என அறிவிப்பு செய்யப்பட்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
The post சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டும் பைன் பாரஸ்ட் appeared first on Dinakaran.