நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்

1 month ago 8

நன்றி குங்குமம் டாக்டர்

உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்களையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.

1.நோய்த்தொற்றைத் தடுப்போம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ‘உடனே சென்று பார்க்காமல்விட்டால் தவறாக நினைத்துக் கொள்வார்கள்’ என்று நினைத்துக் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது. ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது இரண்டுபேர் போனால் போதும். 13 வயதுக்குக் கீழ், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவமனை செல்வதைத் தவிர்க்கலாம். ஏனென்றால் இந்த வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோயாளியை விசாரிக்கப் போகும் இடத்தில் இவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், சளி போன்ற பிரச்னை இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும். அட்டெண்டர், நோயாளி, நர்ஸ் ஆகியோருக்கும் நமது உடல்நலக் குறைவால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவமனை செல்லும்போது ஆல்கஹால் சேர்க்கப்பட்ட `ஹேண்ட் ரப்’ கொடுப்பார்கள். அதைக்கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். நோயாளியைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் `ஹேண்ட ரப்’ பயன்படுத்த வேண்டும். சோப்பைக் கொண்டு கைகளைக் கழுவுவதால் 95 சதவிகிதக் கிருமிகள் அழிகின்றன. தீக்காயமடைந்தவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களைப் பார்க்கும்போது ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். நலம் விசாரிக்கச் செல்லும் இடத்தில் நம்மால் நோயாளிக்கு எந்தத் தொந்தரவும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

2. பூச்செண்டு வேண்டாம்!

உடல்நலமில்லாதவர்களைப் பார்க்கச் செல்லும்போது பூச்செண்டு கொடுப்பது நல்லதல்ல. பூச்செண்டில் இருக்கும் சிறு பூச்சிகள் நோயாளிக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூஞ்சைகள் நோய்த்தொற்றை உண்டாக்கலாம். சிலர் உணவு சமைத்து எடுத்துச் செல்வார்கள். கிட்னிமாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் உப்பு, காரம், இனிப்பு குறைத்துப் பத்தியச் சாப்பாடு கொடுப்பார்கள். வீட்டில் சமைத்து எடுத்துச் செல்லும் உணவில் உப்பும் காரமும் அதிகமிருக்கும். அந்த உணவை நோயாளி சாப்பிடுவதால் அவர் குணமடையும் காலம் தள்ளிப்போகும். எனவே, வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவை நோயாளிக்குக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

3. உற்சாகமூட்டுங்கள்!

உடல்நலமில்லாதவர் முன் ஜோக் அடிப்பது, அவர்களைப் பார்க்க வைத்தபடித் தின்பண்டங்களைச் சாப்பிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கலாம். இதய நோயால் பாதிக்கப்பட்டோரிடம் சோகச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது எதிர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தும். அரசியல் பேசுவது, எங்கோ நடந்த பேரிழப்புகள் பற்றிப் பேசுவதையும் தவிர்க்கலாம். தன்னம்பிக்கை தரும்விதமாகப் பேச வேண்டும். நாங்கள் உங்களுக்குத் துணை நிற்போம் என்று நம்பிக்கை அளிக்க வேண்டும். விரைவில் குணமாகிவிடும் என்று உற்சாகம் தரவேண்டும். அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த வேண்டும்.

4. தனிமை முக்கியம்!

எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளிக்குத் தனி அறை கிடைக்காது. செமி பிரைவேட் அறைகளில் நான்கு நோயாளிகள் ஓர் அறையைப் பகிர்ந்திருப்பார்கள். ஒவ்வொருவருக்குமான நோயின் தன்மை, வலி, தூங்கும்நேரம் வெவ்வேறாக இருக்கும். இத்தகைய சூழலில் பார்வையாளர்கள் மெதுவாகப் பேச வேண்டும். சத்தமாகப் பேசுவதையும் அரட்டை அடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அவர்களது வலி, வேதனையை மனதில்கொண்டு நடக்க வேண்டும்.

5. தலையணை, பெட்ஷீட் – கவனம்!

ஒரு சில மருத்துவமனைகளில் அட்டெண்டருக்கும் சேர்த்துத் தலையணை, பெட்ஷீட் கொடுப்பார்கள். பல மருத்துவமனைகளில் இந்த வசதியெல்லாம் கிடையாது. எனவே அவர்கள் வீட்டிலிருந்தே பெட்ஷீட், தலையணை எடுத்துச்செல்ல வேண்டும். இதனால் வீட்டிலுள்ள கிருமிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இது நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.

மருத்துவமனை அதிகபட்ச நோய்க்கிருமிகள் வாழும் இடம். மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் பெட்ஷீட், தலையணை மற்றும் நோயாளிக்கான உடை ஆகியவை `ஆட்டோகிளேவ்’ முறையில் தூய்மை செய்யப்படும். இதன்மூலம் அவற்றிலுள்ள கிருமிகள் அழிக்கப்படும். ஆனால் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்துச்செல்லும் பெட்ஷீட், தலையணை ஆகியவற்றுடன் கிருமிகளையும் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இவற்றைத் தவிர்க்க மருத்துவமனையில் பயன்படுத்தியவற்றை வீட்டுக்குக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பது நலம்.

6. `கூகுள்’ வேண்டாம்!

`கூகுள்’ என்பது ஒரு கணினித் தகவல் தளம். அதில், நோய் பற்றியும் அதற்கான மருத்துவம் குறித்தும் ஆராய்ச்சி செய்பவர்களை அதிகளவில் பார்க்கிறோம். மேலும் அவர்கள் மருத்துவமனை வருவதற்குமுன் கூகுள் உதவியுடன் தனக்கு என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்று ஒரு பட்டியலே போடுகின்றனர். ஆனால் மருத்துவம் என்பது அப்படியல்ல. ஒருவரது உணவே மற்றவருக்கு விஷமாக மாற வாய்ப்புள்ளது. ஆகவே கூகுள் சொல்லும் விஷயங்கள் எல்லோருக்கும் பொருந்தாது. விளைவின் அடிப்படையிலேயே ஒருவருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவைவிட அவரின் உயிரைக் காப்பாற்றுவதே முக்கியம்.

புற்றுநோய்க்கான கீமோதெரபி மருத்துவம் செய்யும்போது தலைமுடி கொட்டும். முடியைப் பாதுகாப்பதைவிட உயிரைப் பாதுகாப்பதே முக்கியம். இத்தகைய சூழலில் கூகுளில் தேடுவது தேவையற்ற பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தும். உங்கள் உடலில் உண்டாகும் பாதிப்புகளின் அடிப்படையில் மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெறுவதே தெளிவை ஏற்படுத்தும்.

7. பிணக்கு வேண்டாம்!

மருத்துவமனையில் இருக்கும் அட்டெண்டர், நர்ஸ் அல்லது டாக்டரிடம் ஏதாவது கேள்வி கேட்பதற்குமுன்பு நிறைய யோசிக்க வேண்டும். `நோயாளி வாந்தி எடுக்கும்போது ரத்தம் ரத்தமா வருது’ என்பதுபோன்ற விஷயங்களை நோயாளியின்முன்பு சொல்லக்கூடாது. அது பாதிக்கப்பட்டவருக்குத் தேவையில்லாத பயத்தை உண்டாக்கும். மருத்துவமனையில் நர்ஸ், டாக்டர், உதவி மருத்துவர் போன்றோர் ஒரேநாளில் பல நோயாளிகளைக் கவனிக்க வேண்டியிருக்கும்.

அதனால், சிலநேரங்களில் அவர்கள் எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வர். அவற்றைப் பெரிதாக்கி அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளத் தேவையில்லை. மேலும் அவர்கள் நோயாளியை ஒழுங்காகக் கவனிப்பதில்லை என்று புலம்பக்கூடாது; இது அவர்களது மனஅமைதியைக் கெடுக்கும், மற்றவர்களையும் பாதிக்கும். மருத்துவர்களிடம் தேவையான கேள்விகளை யோசித்துக் கேட்க வேண்டும். அந்தக் கேள்வி யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது. முக்கியமாக நோயாளிக்குப் பீதியை ஏற்படுத்தக்கூடாது.

8. மீத உணவு வேண்டாம்!

சில தருணங்களில் அட்டெண்டராக வருபவர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் உணவைச் சாப்பிடுவார்கள். ஒரு சில இடங்களில் நோயாளி மீதம் வைத்த உணவையும் அட்டெண்டர் சாப்பிடுவார். இது நல்லதல்ல. வயிறு மற்றும் கிட்னி தொடர்பான பிரச்னைக்கான சிகிச்சை எடுக்கும்போது இன்புட், அவுட்புட் சார்ட் எடுப்பார்கள். அதை வைத்து நோய் எந்தளவு குணமாகியுள்ளது என்பதை மதிப்பிடுவார்கள். ‘நோயாளி ஒருநாளில் திட உணவாகவும் திரவ உணவாகவும் எவ்வளவு இன்புட் எடுத்துள்ளார்.

அதிலிருந்து சிறுநீர், மலம் எவ்வளவு வெளியேறியுள்ளது, பசியின் தன்மை, செரிமானத் தன்மை எப்படி உள்ளது’ என்றெல்லாம் கணக்கிடுவார்கள். அட்டெண்டர், நோயாளியின் உணவைச் சாப்பிட்டால் நோயின் தன்மையைக் கணக்கிட முடியாது. அதனால், நோயாளியின் உணவையோ, நோயாளி மீதம் வைத்த உணவையோ கண்டிப்பாக யாரும் சாப்பிடக் கூடாது.

9. நேரம் முக்கியம்!

அவசரமான சூழலில் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அங்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சுவாசம், இதயத்துடிப்பு, ரத்தச் சர்க்கரை அளவு ஆகியவை கண்காணிக்கப்படும். மருந்து கொடுக்கவும் பரிசோதனைக்காகவும் அவர் பலமுறை எழுப்பப்படலாம். இதற்கிடையே நோயாளிக்கு ஓய்வும் தேவைப்படும். ஒரு சிலர் `வெளியூரில் நீண்ட தொலைவிலிருந்து வருகிறோம். உடனே நோயாளியைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்’ என்று மருத்துவமனை ஊழியர்களிடம் வாதாடுவார்கள். இது நோயாளிக்கு எந்தப் பலனையும் தராது. மாறாக அவர்களுக்குத் தொந்தரவையே உண்டாக்கும். பார்வையாளர் நேரத்தில் மட்டுமே நோயாளியைச் சந்திப்பது சரியாக இருக்கும்.

10. அட்டெண்டருக்கு அடிப்படைத் தகுதி அவசியம்!

நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும்போது அவர்கள் உடல்நிலை குறித்து மருத்துவர் விசாரிப்பார். அப்போது நோயாளிக்கு முன்பாக, அட்டெண்டர் அதிகம் பேசுவார்.அது நல்லதல்ல. அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிக்கு முதலில் வலி நிவாரணி மாத்திரைகள் கொடுப்பார்கள். நோயாளியால் தாங்கிக்கொள்ளும் அளவு வலி இருக்கும்போது அந்த மாத்திரைகளைத் தவிர்ப்பார்கள். வலிநிவாரணி மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் நோயாளிக்கு நல்லதல்ல. ஆனால் மருத்துவரிடம் பேசும் அட்டெண்டர், `வலியால் இரவெல்லாம் தூங்கலை; ரொம்ப அவதிப்படுறாங்க…” எனச் சொல்வார். அது நல்லதல்ல என்பதால் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

நோயாளிக்கு அட்டெண்டராகச் செல்பவர்கள் நோயாளியின்மீது அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை வேண்டும். நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நோயாளியைக் கவனிக்கும்போது சரியான தூக்கம் இருக்காது. நோயாளி முறையாக மருந்து, உணவு எடுத்துக்கொள்ள உதவும் மனநிலையிலும் அவர்கள் இருக்க வேண்டியது அவசியம்.

தொகுப்பு: சரஸ்

The post நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள் appeared first on Dinakaran.

Read Entire Article