நேற்று செய்தி வாசிப்பாளர் இன்று யோகா ஆசிரியர்!

2 weeks ago 4

நன்றி குங்குமம் தோழி

‘‘சின்ன வயதில் இருந்தே எனது கனவு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதே. எனவே விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க விண்ணப்பம் எல்லாம் வாங்கிய நிலையில், பெற்றோர் என்னை பொறியியல் படிக்க வற்புறுத்தினார்கள். விருப்பம் இல்லைதான் என்றாலும், பெற்றோருக்காக படித்து முடித்து முதல் வகுப்பில் தேர்வானேன். ஆனாலும், எனக்கிருந்த செய்தி வாசிப்பாளர் கனவு குறையவில்லை.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறிது காலம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய நிலையில், வெளிநாட்டில் பணியாற்றும் மாப்பிள்ளையை பார்த்து வீட்டில் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை கணவரோடு குவைத் நாட்டில் தொடங்கியது’’ என்கிற மருதம், 10 ஆண்டுகள் கணவரோடு குவைத்தில் வசித்த நிலையில், தற்போது யோகா ஆசிரியராக சென்னையில் பட்டையை கிளப்புகிறார்.

‘‘பள்ளியில் படிக்கிற காலத்தில் இருந்தே நான் யோகாவும் கற்று வந்ததால், குவைத்தில் நாங்கள் வசித்த வீட்டுக்கு அருகில் இருந்த யோகா வகுப்பில் இணைந்து, தினமும் சென்றுவரத் தொடங்கினேன். குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களையும் அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தேன். கொரோனா பரவலுக்குப்பின் வாழ்க்கை தலைகீழாய் மாற, பிறகு குழந்தைகளோடு சென்னை வந்து செட்டிலானேன்.குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றபின், வீட்டைக் கவனித்துக்கொண்டு, எனக்கான வருமானம் குறித்தும் யோசித்ததில், யோகா ஆசிரியர் பயிற்சி குறித்து தெரியவந்தது.

அதில் இணைந்து முறையாக பயிற்சிகளை மேற்கொண்டு, சான்றிதழ் பெற்று, பிறகே சொந்தமாக ஆன்லைன் யோகா வகுப்புகளை வீட்டில் இருந்து எடுக்கத் தொடங்கினேன். முதலில் ஒன்று, இரண்டு என ஆரம்பித்து இன்று என்னிடம் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வயது வித்தியாசம் இன்றி யோகா கற்றுக்கொள்கிறார்கள்…’’ தன்னம்பிக்கை மிளிர புன்னகைக்கிறார் யோகா ஆசிரியர் மருதம்.

‘‘ஒரு மாணவியாக நான் யோகா வகுப்புகளுக்கு சென்றுவந்த போது, எனக்கிருந்த பிசிஓஎஸ் பிரச்னை சரியானதையும், ஒருமுறை தோள்பட்டையில் ஏற்பட்ட முறிவில் லிக்மென்ட் டேர் பிரச்னை ஏற்பட்டு, விடாமல் நான் யோகா செய்ததில், சின்ன வலி கூட இன்றி பிரச்னைகளில் இருந்து வெளிவந்த நினைவுகளையும் பின்நோக்கி நகர்த்தி நினைவுப்படுத்தியவர், நான் யோகா செய்கிற அந்த ஒரு மணி நேரமும் மனதிற்கு நிம்மதியாகவும், மீதி 23 மணி நேரமும் என்னைத் தயார்படுத்துகிற ஒன்றாகவும் யோகா கை கொடுத்தது’’ என்கிறார்.

‘‘என்னை மாதிரி இருக்கும் பெண்களுக்கும் இந்த உணர்வையும், ஆற்றலையும் கடத்த நினைத்தே காலை 6 முதல் 7 வரை ஒரு ஆன்லைன் யோகா வகுப்பும், மீதி இரண்டு வகுப்புகளை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வசதிப்படுகிற நேரத்திலுமாக எடுக்க ஆரம்பித்தேன். யோகா பயிற்சியாளராக இதில் நான் ஒரு கருவி மட்டுமே’’ என்கிறார் மருதம்.ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் சீராக இல்லாத போது சில குழப்பங்கள் உடலுக்குள் நேரும். இந்தக் குழப்பம்தான் வலியாகவும், பின்னர் நோயாகவும் மாறி, வேறொரு இயக்கத்திற்குள்(mechanism) உடலைக் கொண்டு செல்கிறது. சில நேரம் கழிவுப் பொருள் செல்லுக்குள் தேங்கும் போதும் ஓட்டம் தடைபடுகிறது. உடலில் எந்த உறுப்பு பாதிப்படைகிறதோ, அதை செயலுக்குக் கொண்டு வர, உடலை வளைத்து, நெளித்து முறையான ஆசனங்களை செய்யும் போதுதான் பிரச்னை ஓரிரு மாதங்களில் சரியாகும்.

யோகாவில் முன் தடுப்பு நடவடிக்கைகள் பல உண்டு. கைகளைச் சுற்றி, வர்ம பாயின்டை மெதுவாய் தொடும் போதே ஓட்டங்கள் சரியாகும். தொடர்ச்சியாக யோகாவை செய்ய ஆரம்பித்த ஓரிரு மாதங்களில் உடல் ரீதியான பிரச்னைகளில் இருந்து மெல்ல விடுபட ஆரம்பிப்பீர்கள். கூடுதலாக 8 மணி நேரம் செய்கிற வேலையை 5 மணி நேரத்திற்குள் முடிக்கின்ற ஆற்றலும் வந்துவிடும்’’ என்றவர், ‘‘யோகா செய்வதற்கு முன், உடம்பைத் தயார்படுத்த வார்ம்அப் செய்வதன் மூலமாகவும் ஒருசில பிரச்னைகளை சரி செய்ய முடியும்’’ என்கிறார். ‘‘ஒரு மணி நேரம் தினமும் யோகா செய்வதன் வழியாக மனதை ஒருநிலைப்படுத்துதல், கவனம் செலுத்துதல், தேவையான ஆற்றலை கொண்டு வர முடியும்.

யோகாவில் பேஸிக், இன்டர்மீடியட், அட்வான்ஸ் என மூன்று நிலைகள் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறைக்கு இன்டர்மீடியட் நிலைவரை செய்தாலே போதுமானது. பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருப்பதே அஹிம்சா என்றால், அந்த அஹிம்சா நம்மில் இருந்து வரவேண்டும்’’ என்கிற மருதம், ‘‘என் உடல் எனக்கு எந்தளவு அனுமதிக்கிறதோ, அதை மட்டும் யோகாவில் செய்தால் போதும். பயிற்சி எடுக்க எடுக்க முன்னேற்றம் தானாக வரும். ஆனால் பயணத்தை மட்டும் தடை செய்யக் கூடாது’’ என்கிறார் அழுத்தமாக.

‘‘எந்த ஆசனத்தை தேர்ந்தெடுத்து செய்கிறோமோ அதில் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். அதற்கான அர்ப்பணிப்பை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். வரும் முன் காத்தல், வந்த பிறகும் காத்தல் இவற்றையெல்லாம் யோகா செய்யும் என்றாலும், அது அந்தந்த தனிப்பட்ட நபரின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியை பொறுத்தது. அப்படிச் செய்தால் மட்டுமே உடல், மனம், மூச்சு, செயல் எல்லாம் ஒரு நிலையில் இருக்கும். இதைத்தான் living in the present என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதற்காகவே மைன்ட் ஃபுல்னெஸ் என்கிற பயிற்சியும் இருக்கிறது’’ என்றவாறு விடைபெற்றார்.

ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளில், இன்றைக்கு பிசிஓஎஸ்., பிசிஓடி, பைஃப்ராய்ட்ஸ், சிஸ்ட், என்டோமெட்ரியாசிஸ், பெரிமெனோபஸ் என வெவ்வேறு பெயர்களில் பிரச்னைகள் உள்ளது. இவற்றிற்கு தீர்வு தரக்கூடிய ஒருசில ஆசனங்களை நமக்காக செய்து காட்டுகிறார் யோகா ஆசிரியர் மருதம்.

பத்த கோணாசனம்

பட்டர்ஃபிளை வடிவில் செய்யப்படும் இந்த ஆசனத்தால், சோர்வு குறைந்து இடுப்புத் தசைகள் வலுப்பெறும். செரிமான பிரச்னை, குடலிறக்கப் பிரச்னைகள் சரியாகும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்கும்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

முதுகை திரிகிய நிலையில் இந்த ஆசனம் செய்யப்படுவதால், முதுகெலும்பு இயக்க பிரச்னை, பாங்கிரியாஸ், கருப்பை தொடர்பான பிரச்னைகள் நீங்கும், செரிமானம் சரியாவதுடன், தூக்கம்
நன்றாக வரும்.

யோனி முத்திரை

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கருவுறுதல், இனப்பெருக்க உறுப்பு கோளாறுகள் மற்றும் மெனோபாஸ் போன்ற பிரச்னைகளுக்கு இதில் தீர்வு கிடைக்கும்.

தனுராசனம்

வில்லை போன்று உடலை வளைத்து செய்யப்படும் இந்த ஆசனத்தில், அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொப்பை, வயிற்று கொழுப்பு, ஊளைச்சதைகள் நீங்குவதுடன், பாங்கிரியாஸ் மற்றும் சிறுநீர் உறுப்புகள் நன்கு வேலை செய்யும். ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். பெண்களின் கர்ப்பப்பை பலப்படுவதுடன், மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். இளமைப் பொலிவு கூடும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post நேற்று செய்தி வாசிப்பாளர் இன்று யோகா ஆசிரியர்! appeared first on Dinakaran.

Read Entire Article