சென்னை: ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாகத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு குறைத்ததால் தங்கத்தின் விலை அதிரடியாக சரிவு ஏற்பட்டு, சவரன் ரூ. 51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை படிப்படியாக உயர ஆரம்பித்தது. அதிலும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்தது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ. 57,000க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் ஒரு கிராம் ரூ. 7,100க்கும், ஒரு சவரன் ரூ. 56,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிரடியாக கிராமுக்கு ரூ. 70 குறைந்து, ஒரு கிராம் ரூ. 7,030க்கும், சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,240-க்கும் விற்பனையானது. கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது மக்களை மீண்டும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
The post நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 குறைந்த தங்கம் விலை appeared first on Dinakaran.