நேர்மை எனும் வலிமையான ஆயுதம்

4 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

இன்றைய நடைமுறையில் உளவியல் குறித்து பல கருத்தாக்கங்களை விவாதிக்கிறோம். அவற்றில் எதிர்மறையானவையே பெரும்பாலும் முன்னிறுத்தப்படுகின்றன. ஏனெனில், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய உளவியல் சிக்கல்களுக்கு காரணங்களை ஆராய்வது மிக அவசியம் இல்லையா? நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனநலக் கோளாறுகள் காரணமாக எதிர்மறைத்தன்மை நம் பேச்சிலும், செயலிலும் கூடிவிட்டது என்றும் சொல்லலாம். உண்மை, நேர்மை என்று பேசினால் பூமர், க்ரிஞ்ச் என்று பட்டப் பெயர்கள் வைக்கப்பட்டு கேலி செய்யப்படுவதும் நிகழ்கிறது.

90- களின் ஆரம்ப காலகட்டத்தில் எம்.ஹிரிஷ் கோல்ட்பர்க் (M. Hirsh Goldberg) என்ற அமெரிக்க எழுத்தாளர் ஏப்ரல் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் அனைவரையும் முட்டாளாக்கி மகிழும் போக்கை கண்டிக்க எண்ணினார். தன் எதிர்ப்பை பதிவு செய்ய அதே ஏப்ரல் மாதம் கடைசி நாளில் பொய்களின் புத்தகம் (The book of lies) என்ற தலைப்பில் தனது நூலை வெளியிட்டார். அவரின் இந்த முயற்சியினால் உலகம் முழுவதும் ஏப்ரல் 30-ஆம் தேதி நேர்மை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாளில் உலகம் முழுவதும் நேர்மைக் கொள்கைகளைப் பகிர்வது, கனிவான பண்பை மனிதர்களிடையே ஊக்குவிப்பது, நடைமுறை வாழ்வில் சிறு சிறு விஷயங்களில் நேர்மையினைக் கடைப்பிடிப்பது, நேர்மைத்தன்மை வாழ்வில் எவ்வாறு பெரும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை முன் வைப்பது போன்ற உயரிய நோக்கங்கள் வலியுறுத்தப்படுகின்றன.

‘அந்தந்த சூழ்நிலைகளின் நியாயங்கள்’ என்பதே அவரவர் நேர்மை என்றாகி விட்ட தற்காலத்தில் சுயநலப் போக்கு அதிகரித்துவிட்டது. உளவியலில் நேர்மை என்பது உண்மைத் தன்மை, சரியானவற்றை செய்வது, எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் முரண்களின்றி நடந்து கொள்வது, மாற்றுக் கோணங்களைப் புரிந்து செயலாற்றுவது, வளமான நம்பிக்கையைக் கட்டமைப்பது மற்றும் ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவது என்று பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நேர்மையானவர்கள் தங்களைப் பற்றி பிறர் தவறாக நினைப்பார்களோ என்று எண்ணாமல் உண்மையை வெளிப்படையாகக் கூறுவார்கள். பிறர் தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக உண்மையைத் திரித்துக் கூறாமல் இருப்பதே நேர்மையின் முதல் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

எந்தச் சூழலிலும் உண்மையின் பக்கம் நிற்பது, வாக்குறுதிகளுக்குக் கட்டுப்படுவது, ஒழுக்க மதிப்பீடுகளுக்கு, நல்நெறிகளுக்கு (Moral Values, Ethics) போன்றவற்றுக்கு மதிப்பு கொடுப்பது, பிறரை ஏமாற்றாமல் செயலாற்றுவது என நேர்மையின் குணங்களைக் கொண்டவர்கள் அரிதாகிவிட்டார்கள் என்று நாமும் புலம்பிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், உண்மையில் நேர்மையாளர்கள் குறைந்துவிடவில்லை. எல்லாக் காலத்திலும் நேர்மையானவர்களும், நேர்மையற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சரியான நபர்களை இனம் காணுவதில் இன்று சிக்கல்கள் அதிகரித்துள்ளன என்பதே உண்மை.

ஒருவன் நேர்மையாளனாக உருவாவது பாரம்பரியக் காரணிகளால் கட்டமைக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வாழ்க்கைச் சூழல், வளர்ப்பு முறை, கல்வி, சுயமதிப்பீடு என பல காரணிகளால் நேர்மை உருவாக்கப்படுகிறது.இவ்வுலகம் வானம்/பூமி, இருள்/ஒளி, நீர்/ நெருப்பு, நன்மை/ தீமை என்று எப்போதும் இரண்டு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. தீய செயல்கள் மிகவும் வலிமையாக இருப்பதால், அதை எதிர்த்து நிற்கும் அளவுக்கு நேர்மையும் மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும்.

ஆனால், நேர்மை இயல்புள்ளவர் தீமையின் ஆதிக்கத்தில் ஏமாற்றம் அடையும்போது தனது நேர்மையிலிருந்து பின்வாங்கி விடுவர். இந்த உலகில் நல்லதே இல்லையா? நல்லவர்களுக்கு இடம் இல்லையா? நேர்மைக்கும் மதிப்பே இல்லையா? என்று வருந்துவார்கள். இனிமேல், நானும் சுயநலமாக இருந்துவிடுகிறேன் என்று நேர்மையைப் பாதியிலேயே கைவிட்டுவிடுவதைப் பார்க்கிறோம். இது முற்றிலும் தவறு. நேர்மையை ஒருபோதும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

ஏனெனில், நேர்மைப் பண்புகள் என்பது ஒருவரைச் சார்ந்தது அல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்துக்கான நல்அடையாளம். நேர்மையாளரைச் சுற்றி ஒரு பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) உருவாகிறது. அது தரக்கூடிய மன வலிமையும், நேர்மறை உணர்வுகளும் ஒருவரின் கையாளும் திறனை (Manifeststion) கூட்டும். அதாவது விரும்பியவற்றை நல்ல மாற்றங்களை அடையக்கூடிய பெரும் புத்தாக்க சக்தி நேர்மைக்குள் அடங்கி இருக்கிறது. இதை நாம் நம்ப ஆரம்பிக்கும்போதே செயல் திறனில் மாற்றங்கள் கண்கூடாகத் தெரியும்.

மேலும், பிறருடைய மகிழ்ச்சியிலும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தன்னிறைவு அடையும் பொதுநலப் பண்பு அல்ட்ரூயிசம் (Altruism) என்று சொல்லப்படுகிறது. இந்த நற்குணம் நாளுக்கு நாள் மனிதர்களிடம் குறைந்துவருவதாக உளவியல் ஆராய்ச்சிகள் எச்சரிக்கை செய்கின்றன. நான் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணுவது போல் பிறரும் முன்னேற வேண்டும் எனும் சமத்துவப் பார்வை எழும்போது அங்கே ஒரு நேர்மறை ரசவாதமும் ஏற்படுகிறது.

அது ரசவாதம் (Alchemi) என்று அறியப்படுகிறது. உளவியலாளர் ஜங் (Jung) ‘தத்துவஞானியின் கல்’ என்று குறிப்பிட்டு இதனை விளக்கியுள்ளார். அதாவது இறுக்கமாகத் தெரியும் வெளியுலகக் கூறுகளை விடவும் சுயத்திற்குள் மறைந்திருக்கும் மென்மையான யதார்த்தத்தை உணர்வது எனலாம். அவர் மனித மனங்கள் உள்ளே இயங்கும் நுண்பண்புகளில் கவனம் செலுத்தும்போது, இருவருக்கிடையே நல்ல புரிதல் எனும் ரசவாதம் ஏற்படுகிறது என்றார்.

அவர் வழியில் நேர்மையின் ரசவாதமே முழுமையானதும் நிலையான மகிழ்ச்சி தரவல்லதுமானது என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர். எனவே எல்லாவற்றையும் மேம்படுத்திக் கொள்ள உதவும் நேர்மையான உள்பார்வையை மேற்கொள்ளத் தயங்குவது ஏன் என நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டும்.இன்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான தமிழ் திரைநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா 1999- ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார்.

அவ்வெற்றியினை அவருக்குப் பெற்றுத் தந்தது இறுதிச் சுற்றில் அவரிடம் கேட்கப்பட்ட எளிய கேள்விக்கு அவர் அளித்த மிகச் சரியான பதிலே. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி மனிதனுக்கு இன்றியமையாத பண்பு எது என்பது அதற்கு அவர் கூறிய ஒரு சொல் பதில் நேர்மை. ‘‘நேர்மைன்னா என்னம்மா?” என்று விளம்பரக் கேள்வியாக, கேலியோடு கடந்து விடக்கூடிய நேர்மை என்ற ஒற்றை சொல்லுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். நமக்குள் ஒளிந்திருக்கும் நேர்மையை மீட்டெடுக்க வேண்டும்.

அதேநேரம், ‘‘It is too bad to be too good” என்ற ஒரு சொல்லாடல் உண்டு. நேர்மையாக இருக்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து தீமை செய்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது, பொறுத்துக்கொண்டே இருப்பது என்பது நேர்மையின் பட்டியலில் வராது. இதைத்தான் நல்லவர்களின் மௌனம் மிகவும் கொடுமையானது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

உரிய நேரத்தில் அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பது நேர்மையின் அடையாளமே. தீமையைக் கண்டு சலனமின்றி மௌனமாக இருப்பது நேர்மையின் தன்மை என்று ஒருபோதும் ஆகாது. இதனை எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதக் கதையிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். மாபெரும் அரச சபையில் திரௌபதியின் ஆடை களையப்பட்டபோது உயரிய கல்வியையும் கலைகளையும் கற்ற பெரும் ஞானி எனப் போற்றப்பட்ட குரு. துரோணாச்சாரியார் போன்றோர் மௌனமாக இருந்தனர். அதுவே பெரும் பாவமாக
அறியப்பட்டதைப் படித்திருக்கிறோம்.

தவறு செய்தவர்களைக் காட்டிலும் தவறினை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்தவர் அதை அங்கீகரிக்கிறார் என்றே பொருள் கொள்ளப்படும். அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்ததையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.நேர்மையால் ஏற்படும் பலன்களில் முதன்மையாக நிற்பது சுயமதிப்பீட்டின் தரமே. நான் நேர்மையாக இருக்கிறேன் என்பது ஒரு மனநிறைவு. தான் நல்லவன் என்று தானே உணர்ந்து ஏற்கும் நிலை. எந்த விதமான துயரச் சூழலிலும்கூட மன அமைதியைக் கொடுக்கும்.

அந்த அமைதியே பெரும் செயல்களை ஆற்றுவதற்கான ஆற்றலைத்தரும் என்று நமக்குத் தெரியாதா என்ன? நடைமுறையில் நேர்மையாளர்கள் சமூகத்தில் அல்லது குடும்பத்தில் தவறைக்கண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்கும்போது பல சவால்களைச் சந்திக்க நேரிடும். மனநிலை ஊசலாட்டம் (Mood swings), கோபம் (Anger issues), இருதுருவ மனக்கோளாறு (Bi-polar disorder) என்று உளச் சிக்கல்களின் பெயர்களை நேர்மையாளர்களுக்குப் பட்டம் கட்டுவதும் நடக்கக்கூடும்.

இவ்வாறு எல்லாவற்றிற்கும் குழந்தைப் பருவ சிக்கல்கள் (Childhood trauma), மன அழுத்தக் காரணிகள் (Stress factor) மன அழுத்தம் (Depression) என்று காதில் கேட்ட / எங்கோ படித்த தடிமனான உளவியல் பெயர்களைக் கூறிக்கொள்வது இன்று நாகரீகமாகிவிட்டது. தான் தன் வேலை என்று மட்டும் சுயநலமாக இருந்து விடுவது, அவநம்பிக்கையோடு இருப்பது, சமூகத்திலிருந்து விலகி எதிர்மறையாக நடப்பதை நியாயப்படுத்துவதும் சகஜமாகிவிட்டது.

நிதானமாக யோசித்துப் பார்த்தோமானால் நம் வாழ்விலும் சிறுவயதிலிருந்து எத்தனையோ நல்ல விஷயங்களும் நடந்து இருக்கும். ஆனால் அவற்றை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். எப்போதோ ஏற்பட்ட அவமானம், வலி, தோல்விகளைக் குறித்தே இப்போதும் பேசிக் கொண்டிருப்பது நேர்மையின் மீது நம்பிக்கை இழக்கச் செய்துவிடும். இந்நிலை ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிரானவராக (Anti- Social) நம்மைத் திருப்பி விடக்கூடும்.

The post நேர்மை எனும் வலிமையான ஆயுதம் appeared first on Dinakaran.

Read Entire Article