ஒரு மாரத்தான் ஓட்டக்காரராக வேண்டுமென்று ஆசையா?முதலில் உங்களால் முடியும் என்று நம்புங்கள். பிறகு அதற்கான முயற்சிகளிலும்,பயிற்சிகளிலும் ஈடு படுங்கள். தினமும் கொஞ்ச தூரம் ஓடுங்கள். படிப்படியாக ஓடும் நேரத்தை அதிகரித்துக் கொண்டே இருங்கள். உங்கள் உடம்பில் ஸ்டெமினா அதிகரிக்கும்.தினமும் அதே சிந்தனையுடன் இடைவிடாமல் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு எதிர்மறை எண்ணங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்கள் கனவு நிறைவேறும்.நாம் நம் திறமைகளை வளர்த்துக் கொண்டால் மட்டும் ஒரு போட்டியில் வென்று விட முடியுமா? எல்லா துறையிலும் எண்ணற்ற திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிபெறும் போட்டியாளர்கள் மற்றவர்களை விட ஐந்து அல்லது பத்து சதவீதம் கூடுதலாய் பயிற்சி மேற்கொண்டு இருப்பார்கள்.அந்த பயிற்சிதான் வெற்றிக்கோட்டில் அவர் கால் பதிவதற்கு உதவுகிறது.இப்போது சிந்தனையைத் தூண்டும் ஒரு கதை. காட்டு வழியில் இரண்டு நண்பர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.போகிற வழியில் அங்கு கரடிகள் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டார்கள்.உடனே ஒருவன் தனது நடப்பதற்கான காலணிகளைக் கழற்றிவிட்டு ஓடுவதற்கான காலணிகளை மாற்றிக்கொள்ள தொடங்கினான்.
நீ என்ன செய்கிறாய்? என்று அவருடைய நண்பன் கேட்டான். நான் ஓடுவதற்கான காலணிகளை மாட்டிக் கொள்கிறேன் என்று பதில் வந்தது. உனக்கென்ன பைத்தியமா? கரடி கொடூரமானது.நீ அதைவிட வேகமாக ஓட முடியும் என்று நினைக்கிறாயா?அதற்கு முதலாமவன் பதில் சொன்னான். நான் கரடியைத் தாண்டி ஓட வேண்டும் என்பதில்லை, உன்னைவிட வேகமாய் ஓடினால் போதும் என்றார். ஆம், மற்றவர்களை விட ஐந்து முதல் பத்து சதவீதம் அனுகூலமான சூழ்நிலையை உங்களுக்கு நீங்கள் அமைத்துக் கொண்டால் போதும். நீங்கள்தான் வெற்றியாளர்.இப்போது கதையில் இருந்து நிஜத்துக்கு வருவோம்.தெலங்கானா மாநிலம் வாராங்கலை சேர்ந்தவர் தீப்தி ஜீவன்ஜி. தீப்தியின் உருவத்தை பார்த்து கிராமத்தில் உள்ள பலர் கேலியும், கிண்டலும் செய்துள்ளார்கள். இதுதொடர்பாக தீப்தியின் தாயார் ஜீவன்ஜி தனலட்சுமி கூறியது என்னவென்றால், “தீப்தி சூரியக் கிரகணத்தின்போது பிறந்தவர். அவர் பிறக்கும்போதே அவருடைய தலை மிகவும் சிறியதாக இருந்தது. உதடுகள் மற்றும் மூக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. அவரைப் பார்த்த எங்களது உறவினர்களும், கிராமத்தினரும் மனவளர்ச்சி குன்றியவர் என்றும் குரங்கைப் போன்ற முக அமைப்பை உடையவர் என்றும் கூறி, அவர் மனம் புண்படும்படி கேலி செய்தனர். வெளியில் தலை காட்டினாலே தன்னை கேலி செய்கிறார்கள் என்பதை அந்த குழந்தையால் எளிதில் அறிந்து கொள்ளமுடிந்தது. வெளியில் விளையாடச் சென்றால்கூட அழுது கொண்டு வரும் அளவிற்கு தீப்தியை துரத்தி, துரத்தி மனதளவில் உருவ அமைப்பை பார்த்து துன்புறுத்தியுள்ளனர் அவரைச் சுற்றி இருந்தவர்கள்.
‘‘எப்போதும் என் மகள், அமைதியாகத்தான் இருப்பார். தெருவிலுள்ள பிற குழந்தைகள் அவரை கேலி செய்தால் வீட்டுக்குள் வந்து அழுவார். நான் உடனே அவருக்கு இனிப்பு கொடுத்து ஆறுதல்படுத்துவேன்” என்கிறார் தீப்தியின் தாய் தனலட்சுமி. அவர் கூறியதுபோல், மற்றவர்களால் வெறுக்கப்பட்டாலும், துரத்தி அடிக்கப்பட்டாலும், அங்கிருந்தே தனது வரலாற்றிற்கான விதையை விதைக்க ஆரம்பித்துள்ளார் தீப்தி. மக்கள் துரத்தி துரத்தியே என்னவோ, அவர் ஓட்டத்தில் சிறந்து விளங்கத் தொடங்கினார். தீப்தி உள்ளூர் விளையாட்டு மைதானத்தில் மிகவும் வேகமாக ஓடக்கூடியவர்.தீப்தியின் இந்தத் திறமையை முதலில் அடையாளம் கண்டவர் அவரது பள்ளி விளையாட்டு ஆசிரியர்தான். வாராங்கல்லில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தீப்தியிடம் ஒளிந்திருந்த திறமையைக் கண்டுகொண்டதோடு, தீப்தியை அழைத்து ‘‘நீ மிகவும் வேகமாக ஓடுகிறாய். இன்னும் சிறப்பான பயிற்சியும், முயற்சியும் எடுத்தால் நீ சர்வதேச அளவில் சாதிக்கலாம்” என்று விளையாட்டு ஆசிரியர் தீப்தியை ஊக்கப்படுத்தினார்.
அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றதும் அவரது விளையாட்டு ஆசிரியர்தான். கூலி வேலைக்குச் செல்லும் தீப்தியின் பெற்றோரும் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்கள். அதன் பயனாக, தன்னுடைய பயணத்தை மெல்லமெல்ல மெருகேற்றிய தீப்தி, கடந்தாண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் 400 மீ. டி20 பிரிவில் தங்கம் வென்றார். அந்த நிகழ்வு தீப்தியின் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. தீப்தி பேரானந்தம் அடைந்தார்.அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 400 மீ. டி20 பிரிவு ஓட்டத்தின் பைனலில் இலக்கை 55.07 வினாடியில் கடந்து, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இந்த வெற்றிகளினால், பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் தகுதி அவருக்குக் கிடைத்தது. இந்தப் போட்டியிலும் நிச்சயம் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோல் தற்போது, பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் டி20 இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார் தீப்தி. பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட பலரும் தீப்திக்கு சமூகவலைத்தளப் பக்கங்கள் வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளார். மேலும், அவருக்கு குரூப்-2 பிரிவில் வேலையும், வாராங்கலில் நிலமும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தவிர, தீப்தியின் பயிற்சியாளரான ரமேஷுக்கும் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளார் தெலுங்கானா முதல்வர்.தீப்தியைக் கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது தங்களது செய்கையை எண்ணி, நாணி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் வகையில், தன் வெற்றி என்ற அழகான முகத்தை உலகத்திற்கே காட்டி ஜொலித்து வருகிறார் தீப்தி. எதிர்மறையாளர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் இருந்து, எதிர்மறை சிந்தனைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்தால் நேர்மறை எண்ணங்கள் தானே வளர தொடங்கும், கூடவே மன உறுதியும் வளரும் என்பது இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உன்னதமான பாடமாகும்.
The post நேர்மறை எண்ணங்களுடன் உயர்ந்து விடு appeared first on Dinakaran.