நேரடியாக, மறைமுகமாக இனி எந்த வர்த்தகமும் நடக்காது பாக். இறக்குமதிக்கு முழு தடை விதிப்பு: தபால், பார்சல் சேவை ரத்து; கப்பல்களுக்கு தடை, இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்

3 days ago 4

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதிக்கு இந்தியா முழு தடை விதித்துள்ளது. இனி நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வர்த்தகமும் நடக்காது. பாகிஸ்தானுடனான தபால், பார்சல் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பாகிஸ்தான் ஆட்டம் கண்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் கடந்த 22ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிரவாதிகளை ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா, நில வழி வர்த்தக பாதையான அட்டாரி-வாகா எல்லையை மூடியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக அடுத்த அடி தரும் வகையில், 3 முக்கிய தடைகளை இந்தியா விதித்துள்ளது. நேரடி, மறைமுக இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் இந்தியா புதிய திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023ல் ‘பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் நேரடி மற்றும் மறைமுக இறக்குமதி, போக்குவரத்து தடை செய்யப்படுகிறது’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. தேச பாதுகாப்பு மற்றும் பொது நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எந்தவொரு விதிவிலக்குக்கும் இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்’’ என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ல் புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. அதன் மூலம் பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் இறக்குமதி வெகுவாக சரிந்தது. ஆனாலும் துபாய் போன்ற 3ம் தரப்பு நாடுகள் வழியாக மறைமுக வர்த்தகம் நடந்து வந்தது. தற்போது இந்த மறைமுக வர்த்தக வழியும் மூடப்பட்டுள்ளது.

கடந்த 2024-25ம் ஆண்டில் ஏப்ரல் ஜனவரி மாதங்களில் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ஏற்றுமதி ரூ.3,800 கோடியாகவும், இறக்குமதி வெறும் ரூ.3 கோடியாகவும் இருந்தது. அத்திப்பழம், துளசி, ரோஸ்மேரி மூலிகைகள், இமயமலை இளஞ்சிவப்பு உப்பு போன்றவை மட்டுமே முக்கிய இறக்குமதிகளாக உள்ளன. எனவே முக்கியமான எந்த பொருட்களுக்கும் இந்தியா, பாகிஸ்தானை சார்ந்து இல்லை என்பதால் இந்த தடையால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதே சமயம், மருந்து பொருட்கள், ஆர்கானிக் ரசாயனங்கள், பிளாஸ்டிக் போன்றவற்றுக்கு பாகிஸ்தான் இந்தியாவை நம்பி உள்ளது.

பார்சல் சேவை ரத்து: பாகிஸ்தானிலிருந்து வான்வழி, தரை வழி உட்பட அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையையும் இந்தியா நேற்று தடை செய்துள்ளது. இதற்கான உத்தரவை ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து எந்த தபாலும், பார்சல்களும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது. பாக். கப்பல்களுக்கு தடை: பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதன் உத்தரவில், “இந்திய சொத்துக்கள், சரக்கு மற்றும் உள்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில், வணிகக் கப்பல் சட்டம் 1958, பிரிவு 411-ன் கீழ் உடனடியாக அமலுக்கு வரும்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி, பாகிஸ்தான் கொடியேந்திய எந்த கப்பலும் இந்திய துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாது. அதே போல, எந்த இந்திய கப்பல்களும் பாகிஸ்தானின் எந்த துறைமுகத்திற்கும் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நலனுக்கு சேவையாற்ற மிகவும் பொருத்தமான முறையில், இந்திய வணிகக் கடற்படையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும், அதன் திறமையான பராமரிப்பினை உறுதி செய்வதையும் இச்சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடன்களை தடுக்க நினைப்பது அரசியல் நோக்கம் கொண்டது
பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே படுமோசமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச கடன்களை நம்பியே பாகிஸ்தான் பிழைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் ரூ.11 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கியிடம் பல கோடி கடன்களை கேட்டுள்ளது. இந்த அத்தனை கடன்களை மறுபரிசீலனை செய்யுமாறு சம்மந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளிடம் இந்தியா வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதே இந்தியாவின் நோக்கம். இவ்வாறு, நிதி உதவி திட்டங்களை கிடைக்க விடாமல் செய்யும் முயற்சியானது அரசியல் நோக்கம் கொண்டது என பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. சர்வதேச நிதியத்தின் கடன் தொடர்பாக அடுத்த வாரம் மறுஆய்வு கூட்டம் நடக்க உள்ள நிலையில் இந்தியாவின் அறிவிப்பு பாகிஸ்தானை பதறச் செய்துள்ளது.

The post நேரடியாக, மறைமுகமாக இனி எந்த வர்த்தகமும் நடக்காது பாக். இறக்குமதிக்கு முழு தடை விதிப்பு: தபால், பார்சல் சேவை ரத்து; கப்பல்களுக்கு தடை, இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் appeared first on Dinakaran.

Read Entire Article