நேபாளம்: ரஷிய மலையேற்ற வீரர்கள் 5 பேரின் உடல்கள் 10 நாட்களுக்கு பின்பு மீட்பு

4 weeks ago 9

மியாக்தி,

நேபாள நாட்டில் உள்ள தவுலகிரி மலையில் ஏறுவதற்காக ரஷியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 14 பேர் கொண்ட குழுவினர் சென்றனர். உலகின் 7-வது மிக உயரம் வாய்ந்த மலை என்ற பெருமை பெற்ற இதன் உயரம் 8,168 மீட்டர் ஆகும்.

நேபாள அரசின் அனுமதியோடு 4 வாரங்களுக்கு முன் மலையேற சென்ற அவர்களில் 5 பேர், கடந்த ஞாயிறன்று, மலையடிவார முகாம் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தனர். இதனால், அதிகாரிகள் பதற்றமடைந்தனர். அவர்களை தேடும் பணி நடந்தது.

இதில், அவர்கள் 5 பேரும் உயிரிழந்து விட்டனர் என கடந்த 8-ந்தேதி உறுதி செய்யப்பட்டது. அவர்களின் உடல்களை கீழே கொண்டு வர பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அதில் பலன் ஏற்படவில்லை.

இந்நிலையில், 10 நாட்களுக்கு பின்னர் நேற்று (16-ந்தேதி) அவர்கள் அனைவரின் உடல்களும் ஹெலிகாப்டர் ஒன்றில் கீழே கொண்டு வரப்பட்டன. இதன்பின்னர் நேற்று மதியம் 2 மணியளவில் காத்மண்டு நகருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக, திரிபுவன பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

நேபாள சுற்றுலா துறையின் தகவலின்படி, காணாமல் போன ரஷியாவை சேர்ந்த அந்த 5 பேரும் 7,600 மீட்டர் உயரத்தில் மரணம் அடைந்து கிடந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவர்களின் உடல்கள் மீட்டு கொண்டு வரப்பட்டு உள்ளன. இவர்களுடன் சென்றவர்களில் 2 பேர் கடந்த 5-ந்தேதி தவுலகிரி மலையில் ஏறி விட்டனர். 7 பேர் மலையேறும் முடிவை கைவிட்டு விட்டு திரும்பினர்.

Read Entire Article