
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, சாந்திநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த சுடர்வேல்வேந்தன் மகன் பிரீத்தம் (வயது 26) மற்றும் அவரது நண்பரான டவுண் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முத்துப்பாண்டி(38) ஆகிய இருவரும் 2.4.2025 அன்று பிரீத்தம் வீட்டின் மொட்டை மாடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போழுது பிரீத்தம் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 40.700 கிராம் தங்கச் சங்கிலியை உடனிருந்த முத்துப்பாண்டி பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரீத்தம் மது போதையில் இருந்ததால் தடுக்க முடியவில்லை எனவும், முத்துப்பாண்டியிடம் பலமுறை கேட்டும் தங்கச் சங்கிலியை திரும்ப தராததால் நேற்று (8.5.2025) பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பிரீத்தம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.