
சேலம்,
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கிஷோர் (வயது 9). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவனுக்கு கடந்த 28-ந்தேதி திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர், தங்கள் மகனை வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் சிறுவனை பரிசோதித்த போது நாய் கடித்தால் ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து சிறுவனிடம் கேட்ட போது சமீபத்தில் விளையாடி கொண்டிருந்த போது நாய் கடித்தது என்று கூறி உள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நாய் கடித்து பல நாட்கள் ஆகியும் அது பற்றி சிறுவன் பெற்றோரிடம் கூறாமல் இருந்து உள்ளான். இதனால் நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய் பாதித்து சிறுவன் இறந்து உள்ளான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள், மாணவர்கள் வீட்டில் இருப்பார்கள். அப்போது வீட்டில் வளர்க்கும் நாய்களின் உமிழ் நீர் பட்டாலே அதற்கான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்' என்றார்கள்.