நெல்லையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர் கைது

3 hours ago 2

கடலூர்,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன்காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் கடலூர் சேடப்பாளையத்தை சேர்ந்த போலீஸ்காரர் சம்பத் பாதுகாப்பு பணிக்காக நெல்லைக்கு சென்றார். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பத்துக்கும், அந்த பெண்ணுக்கும் மீண்டும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து அந்த இளம்பெண்ணை, போலீஸ்காரர் சம்பத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் அழைத்து வந்து தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய சம்பத் மறுத்து விட்டார். இதனையடுத்து அந்த இளம்பெண் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் மேற்பார்வையில், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சம்பத்தை (வயது 28) கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article