நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் மாணவன் படுகாயம் அடைந்தார். தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவன் நலமுடன் இருப்பதாகவும் அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இன்று பென்சில் கேட்டதாகவும் அதைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் கையில் வெட்டு விழுந்து உள்ளது. அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் பள்ளிக்குள் எப்படி அரிவாளைக் கொண்டு வந்தான் என்று காவல் துறையினர் மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நெல்லையில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்: நடந்தது என்ன? appeared first on Dinakaran.