சென்னை,
நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்வதற்காக 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை வழங்கியும், வெள்ளித்தகடு பதிக்கும் பணியையும் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதனைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை, நெல்லையப்பர் கோவிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித்தேர் 1991-ம் ஆண்டு தீ விபத்தில் எரிந்து விட்டது. சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் ராஜரத்தினம், சபாபதி ஆகியோர் 100 கிலோ வெள்ளிக்கட்டியை வழங்கியுள்ளனர்.
இதன் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் ஆகும். அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.