
நெல்லை,
தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுனில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் தவிர ஏராளமான வெளியூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள். மேலும் புதுமண தம்பதிகள், கல்லூரி மாணவ-மாணவிகளும் வந்து வழிபடுவதுடன் செல்போன் மூலம் செல்பி எடுக்கிறார்கள்.
உள்பிரகார வீதிகள், ரதவீதிகள், இசைத்தூண், கல்தூண்களில் உள்ள சிற்பங்களின் அருகில் நின்றும் புகைப்படம், வீடியோ எடுத்து செல்கிறார்கள். இதற்கு பெரிதாக கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படுவதில்லை. இவ்வாறு கோவில், சுற்றுலா தலங்களில் எடுக்கும் புகைப்படங்களை சிலர் தங்களது நண்பர்களுக்கு பகிர்வதுடன், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்கிறார்கள்.
இதேபோல் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த ஒரு மாணவரும், மாணவியும் சேர்ந்து அம்பாள் சன்னதி அருகே நின்று நடனமாடி வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அதனை பிரபல பாடலுடன் இணைத்து 'ரீல்ஸ்' வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கோவில் நிர்வாக அலுவலர் அய்யர் சிவமணி நேற்று நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புனிதமிக்க இடமான சுவாமி நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகிறோம் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே நெல்லையப்பர் கோவிலில் நடனமாடி 'ரீல்ஸ்' வீடியோ ெவளியிட்ட மாணவரும், மாணவியும் நேற்று தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோ வெளியிட்டனர். அதில், ''நெல்லையப்பர் கோவிலில் நடனமாடி வீடியோ எடுத்ததற்கும், அதை வெளியிட்டதற்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டோம். இனிமேல் இது போன்ற இடங்களில் வீடியோ எடுக்க மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளனர்.