
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.
இதையொட்டி காலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பாண்டிய ராஜா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. நிறைநாழியில் நெல்லும், நெற்கதிரும் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்- அஸ்திரதேவி தீர்த்தவாரி நடைபெற்றது.
இரவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சாமியிடமிருந்த செங்கோலை எடுத்து பாண்டிய ராஜாவிடம் வழங்கப்பட்டது. பின்னர் அதை மேளதாளம் முழங்க கோவில் அர்ச்சகர், செயல் அலுவலர் அய்யர் சிவமணியிடம் செங்கோலையும், அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையாவிடம் சுவாமியின் வெள்ளிப்பாதத்தையும் வழங்கினார். அதை அவர் தலையில் வைத்து நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தார்.
பின்னர் செங்கோலை செயல் அலுவலர், மீண்டும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த சுவாமி நெல்லையப்பரிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சொனா. வெங்கடாசலம், கீதாபழனி, செல்வராஜ், உஷாராமன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி உத்திரத்தையொட்டி கோவிலில் உள்ள வன்னியப்பர் சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, பூஜை நடந்தது. இதைபோல் தேரடி கருப்பசாமிக்கும், சங்கிலி பூதத்தாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.