நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா முன்னேற்பாடு பணிகள் மும்முரம்

1 week ago 2

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விழாவின் 9-வது நாளில் சுவாமி, அம்பாள், விநாயகர், சண்முகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டு 4 ரத வீதிகளிலும் வலம் வரும்.

இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி ரூ.1.39 கோடி செலவில் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ரூ.59 லட்சத்தில் புதிதாக சண்டிகேஸ்வரர் தேர் செய்யும் திருப்பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. தற்போது அச்சு பொருத்தப்பட்டு அதன் மேல் பகுதியில் பொருத்த வேண்டிய பாகங்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அமைக்கப்படுகிறது.

ரூ.6.50 லட்சம் மதிப்பில் சுவாமி, அம்பாள் தேர்களுக்கு 6 புதிய வட கயிறுகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சுவாமி தேர் இழுத்தபோது அடிக்கடி வட கயிறுகள் அறுந்ததால் தற்போது புதிய கயிறுகள் வாங்கப்பட்டுள்ளன. சுவாமி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களுக்கு ரூ.43 லட்சத்தில் மரக்குதிரைகள், துவார பாலகர், கந்தர்வர், பிரம்மா யாழிகள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்களில் பொருத்தப்பட வேண்டிய மரக்குதிரைகளுக்கு வர்ணம் தீட்டுதல், சறுக்கு கட்டைகள் தயார் செய்யும் பணி உள்ளிட்டவைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ரூ.5.54 லட்சத்தில் விநாயகர் தேருக்கு புதிய சக்கரங்கள் வாங்கி, அவை பொருத்தப்பட்டு புதுப்பொலிவாக தேர் காட்சி அளிக்கிறது. சுவாமி, அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு ரூ.9.92 லட்சத்தில் புதிய தேர் அலங்கார பதாகைகள், ரூ.1.95 லட்சம் செலவில் சுவாமி சன்னதி 3-ம் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி முகப்பு மர மண்டபம் முக மராமத்து செய்தல், ரூ.1.85 லட்சம் செலவில் மர மண்டபத்தை சீரமைத்து புதுப்பித்தல்,

ரூ.10.30 லட்சம் செலவில் சுப்பிரமணியர், விநாயகர் தேர்களை சுத்தம் செய்து பாலிஷ் செய்தல் மற்றும் சுவாமி சன்னதி கொடிமரம் அருகே நவக்கிரகங்களுக்கு மேல்புறம் மர அலங்காரம் சீரமைத்தல், கோவில் முன் பந்தல் அமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Read Entire Article