
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் 23.04.2022 அன்று பழவூர் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த பழவூர், பால் பண்ணை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்(எ) படையப்பா (வயது 44) அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கத்தியால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சுத்தமல்லி காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆறுமுகம்(எ) படையப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (28.04.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் ஆறுமுகம்(எ) படையப்பாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.13,500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் நிறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. சத்யராஜ், சுத்தமல்லி காவல் துறையினர் மற்றும் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரபா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் துரித நடவடிக்கையால் 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையும், 41 குற்றவாளிகளுக்கு (14 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட) ஆயுள் தண்டனையும், 9 கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட 13 குற்றவாளிகளுக்கு (5 முதல் 12 ஆண்டுகள் வரை) சிறை தண்டனையும் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.