
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், சத்திரம்புதுகுளம், பாலாஜி அவன்யூவைச் சேர்ந்த முருகன் (வயது 62), ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மாஸ்டராக கடந்த 1.9.2004 முதல் 21.4.2008 வரை பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் RD புத்தகத்தில் வாடிக்கையாளர்கள் போல் போலியாக கையெழுத்திட்டு பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து திருநெல்வேலி உட்கோட்டம், அஞ்சல் அலுவலகம், உதவி கண்காணிப்பாளர், பாலகிருஷ்ணன், முருகன் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 1 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து, தேடப்பட்டு வந்த முருகனை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏட்டு முத்துராமலிங்கம் ஆகியோர் முருகனை சென்னை, தி.நகர், தெற்கு போக்ரோடு பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று, நேற்று முன்தினம் (29.04.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இவ்வழக்கில் போலியாக வாடிக்கையாளரின் கையெழுத்திட்டு பண மோசடியில் ஈடுபட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.