நெல்லை: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாட காய்கறிகள், பலசரக்கு, வீட்டு உபயோக பொருட்கள், கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொருட்களை வாங்க நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தனர். இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான காய்கறிகள், கரும்பு, பனங்கிழங்கு, ஓலை, பச்சரிசி, அச்சுவெல்லம் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.
நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட், நெல்லையப்பர் கோயில் ரதவீதிகள், பாளை மார்க்கெட் பகுதி, மகாராஜநகர் உழவர் சந்தை, மேலப்பாளையம் உழவர் சந்தை, தச்சநல்லூர், பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டிலும், பலசரக்கு கடைகள், நடைபாதைகளில் கடைவிரித்து வைக்கப்பட்டுள்ள மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கரும்பு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சமீபத்தில் திருமணம் முடிந்த புதுமண தம்பதிகளுக்கு தலை பொங்கல் படி சீர்வரிசை கொடுக்க செல்பவர்கள் வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி கரும்பு கட்டுகளை வாங்கிச் சென்றனர். இதனால் பாளை மார்க்கெட், டவுன், மேலப்பாளையம் சந்தை, டவுன் ரதவீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் ஓழுங்குபடுத்தினர். நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகர போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்புகள் தேனி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வியாபாரிகள் லாரிகள் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். நெல்லையில் 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.650க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.50 முதல் 60 வரை சைஸ்க்கு தகுந்தவாறு விற்பனையாகிறது. நெல்லை டவுன், பாளை மார்க்கெட், மகாராஜநகர், மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் மஞ்சள் குலைகள் ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல் 25 எண்ணம் கொண்ட பனங்கிழங்கு ஒரு கட்டு ரூ.125க்கு விற்பனையாகிறது. பொங்கல் வைக்க தேவையான பனை ஓலைகள் பல இடங்களில் கொண்டு வந்து குவித்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஓலை ரூ.20, 30 என அதன் அளவிற்கு தகுந்தவாறு விற்பனையாகிறது. பெரிய ஓலை 5 எண்ணம் கொண்ட கட்டு ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஓலையை வெட்டி கட்டி தருவதற்கு கூடுதலாக ரூ.20ம் வியாபாரிகள் வசூலிக்கின்றனர். பொங்கல் பானை வைக்க தேவையான தனி அடுப்பு ரூ.120ம், செம்மண் அடுப்பு கட்டிகள் 3 எண்ணங்கள் ரூ.180க்கும், சுடுமண் மூலம் செய்யப்பட்ட அடுப்பு கட்டிகள் ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
The post நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகைக்காக மார்க்கெட்களில் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள்குலைகள் குவிந்தன appeared first on Dinakaran.