
திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் பேட்டை கோடீஸ்வரன்நகர் பகுதியை சேர்ந்த கோபால் மகன் விஜயகுமார் (வயது 42) என்பவர் திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்தில் 7.4.2025 அன்று முதல் செல்வவடிவு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கே அவர் கடந்த மாதத்தில் பணிபுரிந்த 24 நாட்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரின் உறவினரான மருதூரைச் சேர்ந்த காத்தமுத்து மகன் ரத்தினவேல்(27) என்பவர் தனது தங்கைக்கு ஆதரவாக, குறைவான சம்பளத்தை கொடுத்ததாக அந்த அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து விஜயகுமாரை அரிவாளால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து விஜயகுமார் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் சந்திப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரத்தினவேலை கைது செய்து விசாரணை செய்தனர்.