நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தென் மாவட்டங்களில் தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்குனி மாதத்தில் நடக்கும் உத்திர திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுவாமி சன்னதியில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதியுலா வந்தது.
கொடிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதும், சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்திற்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி, அம்பாளை தரிசித்து சென்றனர். நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4ம் திருவிழாவான 4ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிக்குள் மூங்கில் காட்டில் ராமகோனுக்கு சுவாமி நெல்லையப்பர் தோன்றி காட்சி கொடுத்த வரலாற்று நிகழ்வும், அதைத்தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலாவும் நடக்கிறது.
பங்குனி உத்திர 10ம் திருவிழாவான வரும் 10ம் தேதி காலையில் பங்குனி உத்திர சிறப்பு ஹோமம், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வைபவம் நடக்கிறது. இந்நிகழ்வில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் செயல் அலுவலர் ஆகியோரிடம் சுவாமியின் திருப்பாதம், வெள்ளி செங்கோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மண்டபத்தை மூன்று முறை வலம்வரும் வைபவம் நடக்கிறது. நாளை 2ம் தேதி முதல் 9ம்தேதி வரை நெல்லையப்பர் கோயில் உடையவர் லிங்கத்துக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.
The post நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.