நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பார்ம் பணிகள் மும்முரம்: கம்புகளை கட்டி புதிய தண்டவாள பாதை அமைக்க முயற்சி

3 hours ago 3

நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி புதிய தண்டவாள பாதை அமைப்பதற்காக கம்புகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே ேகாட்டத்தில் அதிகளவு வருவாய் மிக்க ரயில் நிலையத்தில் 2வது இடத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்ம்களை விஸ்தரிக்கவும், முகப்பு மற்றும் பார்க்கிங் வசதிகளை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தற்போது பிளாட்பார்ம்கள் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில், பயணிகள் பயன்பாட்டிற்கும், எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களை நிறுத்திட போதிய பிளாட்பார்ம்கள் இல்லை.

மொத்தம் 5 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில், காலை, மாலை வேளைகளில் சில ரயில்கள் உள்ளே வருவதற்கு சிக்னல் கிடைப்பதில்லை. குறிப்பாக 5வது பிளாட்பார்மில் இருந்து 2 பாசஞ்சர் ரயில்கள் தினமும் வெவ்வேறு ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றன. மேலும் மாலை வேளையில் ரயில் நிலையத்திற்குள் ரயில்கள் வந்து செல்லவும் கூடுதல் நேரம் பிடிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கூடுதலாக 6வது பிளாட்பாரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த சரக்கு முனையம் கங்கைகொண்டான் பகுதிக்கு சென்றுவிட்ட நிலையில், அப்பகுதியில் தற்போது 6வது பிளாட்பார்மை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக தரைத்தளம் சமப்படுத்தப்பட்டு, அதன் மீது ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. மேலும் நடை மேடை அமைப்பதற்கான கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்டு, அதிலேயும் மண் நிரப்பி தளத்தை சமப்படுத்தி உள்ளனர்.  கான்கிரீட் சிலிப்பர் கட்டைகள் வைத்து, தண்டவாளம் பொருத்த வேண்டிய வேலையும் நடந்து வருகிறது. மேலும் இந்த புதிய பிளாட்பார தண்டவாளங்களை நாகர்கோவில் பாதை மற்றும் தென்காசி பாதையுடன் இணைக்கும் வகையில் ஈரடுக்கு மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் 3வது பாதை அமைக்கப்படுகிறது. இதற்கு பூர்வாங்க வேலைகள் மேற்கொளளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி மண் மேடாக இருந்தது. கடந்த 2 நாட்களாக அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் மண் மேடு அகற்றப்பட்டு தளம் சமப்படுத்தப்பட்டு, இணைப்புக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 6வது தண்டவாளம் செல்லும் பகுதியை குறிப்பிட்டு காட்டும் வகையில் தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில இடங்களில் தண்டவாவளங்களை அப்படியே தூக்கி வைத்து இணைப்பதற்கு வசதியாக ரெடிமேடு தண்டவாளங்கள் தயார் நிலையில் உளளன. ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவு வாசல் பகுதியில் சிலிப்பர் கட்டையுடன் தண்டவாளங்களை பொருத்தி வைத்துள்ளனர். 6வது பிளாட்பார்ம் நடைமுறைக்கு வரும்முன்பு நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழுள்ள பயணிகள் நடைபாதையையும் இடித்து அகற்றிவிட்டு, புதியதாக அமைக்க உள்ளனர். அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

The post நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பார்ம் பணிகள் மும்முரம்: கம்புகளை கட்டி புதிய தண்டவாள பாதை அமைக்க முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article