
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகநேரி, அம்மன்கோவில் வடக்குத்தெரு, முனியசாமி மகன் முருகன் என்பவருடைய சகோதரர் செந்தில்குமார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுடலை மகன் முருகன், சுப்பையா மகன் செந்தில்(எ) செந்தில்குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு இடையே பன்றி வளர்ப்பது தொடர்பாக முன் பகை இருந்தது. அதன் காரணமாக 30.9.2018 அன்று தங்கம்மன்கோவில் அருகில் உள்ள படித்துறையில் அமர்ந்திருந்த செந்தில்குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தச்சநல்லூர் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து முருகன், மகேந்திரன், தங்கராஜ், முருகன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (28.04.2025) நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளிகளான முருகன், விஜயகுமார், செந்தில்(எ) செந்தில்குமார் ஆகிய 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், முருகனுக்கு ரூ.2,500 அபராதம் மற்ற இருவருக்கு தலா ரூ.3,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு குற்றவாளிகள் இறந்து விட்டனர்.