நெல்லை அருகே கவனிப்பாரின்றி பாழாகும் கொலாங்குளம் கால்வாய்; 44 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு: தூர்வாரி அகலப்படுத்த கோரிக்கை

3 hours ago 3


நெல்லை: நெல்லை மாவட்டம், பருத்திபாடு அடுத்த அம்பேத்கர் காலனி பகுதி அருகே அமைந்துள்ளது கொலாங்குளம் என்ற குளம். இந்த குளத்தை நம்பிதான் அப்பகுதியில் உள்ள 44 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இக்குளத்திற்கு மணிமுத்தாறு பிரதான அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கொலாங்குளம் கால்வாய் வழியாக வந்தடைகிறது. மணிமுத்தாறு அணையிலிருந்து வரும் நீர், பிரதான கால்வாய் மூலம் பயணித்து, செந்தான்குளம் அருகே பிரிகிறது. அங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு பயணிக்கும் கொலாங்குளம் கால்வாய், நேரடியாக குளத்திற்கு தண்ணீரைச் சேர்க்கிறது. இந்தத் தண்ணீரைக் கொண்டே இப்பகுதி விவசாயிகள் தங்களின் 44 ஏக்கர் நிலங்களில் நெல், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்தனர். ஆனால், பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த முக்கிய நீர்வரத்துக் கால்வாய் படிப்படியாக தனது பொலிவை இழந்தது.

ஒரு காலத்தில் சுமார் 15 அடி அகலத்துடன் கம்பீரமாக காட்சியளித்த இந்தக் கால்வாய், இன்று தூர்ந்து போய், முட்புதர்கள் மண்டி, வெறும் 3 முதல் 4 அடி அகலத்திற்கு சுருங்கிவிட்டது. இதனால், அணையிலிருந்து வரும் தண்ணீர் முழுமையாக குளத்தைச் சென்றடைவதில் பெரும் சிக்கல் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ், கடந்த 5 ஆண்டுக்கு முன் கால்வாய் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை முழுமையான பலனைத் தரவில்லை. தூர்வாருதலோடு நிறுத்திக்கொள்ளப்பட்டதே தவிர, கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்தும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. மண் கரைகளாக இருந்ததால், அவை உறுதியற்று பலவீனமாகக் காணப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கால்வாயின் எஞ்சியிருந்த சொற்ப பலத்தையும் சிதைத்துவிட்டது. பலவீனமாக இருந்த கரைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், கால்வாயின் அமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளது. தற்போதுள்ள நிலையில், மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும், அது சேதமடைந்த கொலாங்குளம் கால்வாய் வழியாக குளத்திற்கு வந்து சேர்வது என்பது இயலாத காரியமாகிவிட்டது. கால்வாய் தனது நீரோட்டப் பாதையை இழந்து, தண்ணீர் வயல்வெளிகளுக்குள் புகுந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கொலாங்குளத்தை நம்பியுள்ள 44 ஏக்கர் விவசாய நிலங்களும் நீரின்றி காய்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கனவே பராமரிப்பின்றி சீரழிந்து கிடந்த கால்வாய், வெள்ளத்தால் மேலும் மோசமாக சேதமடைந்து, கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இனியும் தாமதித்தால், விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என அஞ்சும் இப்பகுதி விவசாயிகள், கொலாங்குளம் கால்வாயை உடனடியாக முழுமையாக தூர்வாரி, அதன் பழைய அகலத்திற்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும், உடைந்துபோன கரைகளை கற்கள் அல்லது கான்கிரீட் கொண்டு பலமாக கட்டித்தர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, கால்வாயைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் மூலம் 44 ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும்.

The post நெல்லை அருகே கவனிப்பாரின்றி பாழாகும் கொலாங்குளம் கால்வாய்; 44 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு: தூர்வாரி அகலப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article