பாலக்காடு : நெல்லியாம்பதியில் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டு யானை முகாமிட்டு பைக்கை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்தனர். பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி, கைக்காட்டி, அயப்பன் மலை, போத்துபாறை பகுதிகளில் சில்லிக்கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக உலா வருகின்றது.
மேலும், வீடுகளில் வளர்ந்துள்ள தோட்டப்பயிர்கள் வாழை, தென்னை, பாக்கு ஆகிய விளைபொருட்களை ருசித்துண்டு சேதப்படுத்தி வருகிறது. இங்கு பலா, மா மரங்களில் சீசன் துவங்கியுள்ளதால் இதனை யானை துதிக்கையில் பறித்து ருசித்து செல்கின்றது. காட்டு யானை நடமாட்டத்தால் தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அபாய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு நாட்களில் சில்லிக்கொம்பன் யானை, எஸ்டேட் தொழிலாளி பினு என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை தூக்கி வீசி சேதப்படுத்தியது. இரவு நேரங்களில் தொழிலாளர்களின் வீட்டை சுற்றி அலைந்தபடி தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் சில்லிக்கொம்பன் அட்டகாசத்தால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து வேறு பகுதி காட்டிற்குள் விட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post நெல்லியாம்பதியில் பரபரப்பு எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ‘சில்லிக்கொம்பன்’ அட்டகாசம் appeared first on Dinakaran.