பந்தலூர், மே 10: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. 160 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை கொண்ட ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கும் குப்பைகளை ஆங்காங்கு குழி வெட்டி மக்கும் குப்பைகளை புதைத்து வருகின்றனர். மக்காத குப்பைகளை சேகரித்து பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை மறு சுழற்சிக்காக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது சாலையோரங்கள், வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் குப்பைகள் தேங்கி இருப்பதால் யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குப்பையில் இருக்கும் உணவுகள், மாமிசங்களை உண்ண வரும்போது வனவிலங்குகள் மனித மோதல்கள் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நெலாக்கோட்டை ஊராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வு செய்து கொடுத்தால் ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
The post நெலாக்கோட்டை ஊராட்சியில் குப்பைகள் அகற்றுவதில் சிக்கல் வனவிலங்கு-மனித மோதல்கள் ஏற்படுவதாக மக்கள் புகார் appeared first on Dinakaran.