நெருக்கடி

1 week ago 3

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகிக்கிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதல் பாஜவினர் எப்படியாவது ஆட்சியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியின் சூழ்ச்சிகளை முறியடித்து சித்தராமையா தாக்குப்பிடித்து வந்தாலும், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் ஏதாவது ஒருவகையில் சிக்கலை கொண்டு வந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் மூடா வழக்கில் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டுமனை ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சித்தராமையாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்று பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜ, மஜத கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் நடந்த ரூ.187 கோடி ஊழல் தொடர்பாக அத்துறை அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார்.

அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் அவரை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்னையை பாஜ சரியாக பயன்படுத்தி காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை தொடர்ந்து பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார். உடனே பாஜவினர் இலவச திட்டங்களுக்கு நிதி இல்லாமல் மாநில அரசு திணறிவருகிறது என்று பேச தொடங்கிவிட்டனர்.

கர்நாடகா சென்றிருந்த தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலத்தில் முதல்வர், துணை முதல்வர் யார் பேசினாலும் பாஜ விமர்சிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடாத வகையில் கருத்துகளை பரிமாற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து விவசாயிகளின் நிலத்துக்கு உரிமை கொண்டாடி வக்பு வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை பாஜ பெரிய அளவில் கையில் எடுத்தது. வக்பு வாரிய சட்ட திருத்தம் வருவதற்கு முன்பு வருவாய் துறை கோப்புகளில் மாற்றம் செய்ய மாநில அரசு முயற்சிக்கிறது என்று போராட்டம் நடத்தியது.

இதையடுத்து வக்பு வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கிய நோட்டீசை திரும்ப பெறுவதாக சித்தராமையா அறிவித்தார். இருந்தாலும் இப்பிரச்னையை பாஜ தொடர்ந்து எழுப்பி வருகிறது. சென்னபட்டனா, ஷிக்காவி, சிந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கலால்துறையில் ஒரே நாளில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளதாக ஒயின் வியாபாரிகள் சங்கம் ஆளுநருக்கு புகார் அளித்துள்ளனர்.

இதனால் அத்துறை அமைச்சர் திம்மப்பாவை பதவி நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. கலால்துறையில் ரூ.700 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அடுத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

The post நெருக்கடி appeared first on Dinakaran.

Read Entire Article